புதுடெல்லி: பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு, ஆல்பாஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஒன்றிய கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கல்வி உரிமைச் சட்டத்தில் 2019ம் ஏற்பட்ட திருத்தம் மூலம் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் கல்வியாண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குள் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே தொடர்வார்கள்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூடுதல் வழிகாட்டுதலை வழங்குவார்கள். இருப்பினும், தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்னர் எந்த மாணவர்களும் வெளியேற்றப்பட மாட்டார்கள். மேற்கண்ட புதிய விதியானது ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொருந்தும். இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த அணுகுமுறையை தேர்வு செய்யலாம்’ என்று கூறியுள்ளது. ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் 5 மற்றும் 8ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் மேல் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ல் கொண்டு வரப்பட்ட இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி, ஒரு கி.மீ. தொலைவுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆனால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள மேற்கண்ட விதிகளுக்கு நாடு முழுவதும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் மாணவர்கள் கல்வி கற்பதை தடுத்து நிறுத்தும் முயற்சி என்றும், பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால் தமிழ்நாடு, அசாம், பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்குவங்கம் ஆகிய 16 மாநிலங்கள், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள், ஏற்கனவே 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான ‘ஆல்பாஸ்’ திட்டத்தை நடைமுறையில் வைத்துள்ளன. ஒன்றிய அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
அதேநேரம் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோம், ஒடிசா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், தலைநகர் ெடல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், லடாக் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தேர்ச்சி முறையை பின்பற்றி வருகின்றன. அரியானா மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியன இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் தேர்ச்சி முறையை பின்பற்றுகின்றன. இவ்விவகாரத்தில் ஒவ்வொரு மாநிலமும் அவரவர் சொந்த அணுகுமுறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளதால் அந்தந்த மாநில அரசுகள் கொள்கை ரீதியாக இந்த புதிய அறிவிப்பை எதிர்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சிக்கல்
ஒன்றிய கல்வி அமைச்ச அதிகாரிகள் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள், மாநில சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசங்களில் (அந்தமான் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ மற்றும் லட்சத்தீவு) செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில், 5 மற்றும் 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி ரத்து செய்யப்படும். மாநில அளவில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகள், அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளுக்கு ஏற்ப செயல்படலாம்.
உதாரணமாக, உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், மாணவர்களின் தேர்ச்சி முறையை நடைமுறைப்படுத்தும். அதேநேரம் குஜராத்தில் இருக்கும் சிபிஎஸ்ஐ பள்ளிகள், ஆல்பாஸ் திட்டத்தை அமல்படுத்தும் அல்லது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்தும். எனவே 5 மற்றும் 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டதை அந்தந்த மாநில சிபிஎஸ்ஐ பள்ளிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது, அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கு உட்பட்டது’ என்றனர்.
The post 5, 8ம் வகுப்புகளுக்கு இனி கட்டாய தேர்வு; ஒன்றிய அரசு உத்தரவுக்கு தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்கள் எதிர்ப்பு: மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என கருத்து appeared first on Dinakaran.