மத்திய அரசுப் பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் நல ஆர்வலர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் இது குறித்து தங்களின் கருத்துகளை முன்வைக்கின்றனர். எதிர்ப்புக் குரல்களைப் போலவே கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியை முடக்கக் கூடாது என்ற ஆதரவுக் குரலும் இருக்கின்றது.
மத்திய அரசு அறிவிப்பின் விவரம் என்ன? – இத்தனை சர்ச்சைகளை உருவாக்கிய திருத்தத்தை பற்றி முதலில் அறிந்து கொள்வோம். கல்வி உரிமைச் சட்டத்தில் 2019-ம் ஏற்பட்ட திருத்தம் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.