புதுச்சேரி: ஒன்றிய அரசு பிறப்பித்த அரசாணைப்படி, புதுச்சேரியில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு `ஆல் பாஸ்’ வழங்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகளில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற `ஆல் பாஸ்’ முறையை ஒன்றிய அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தால் 2 மாதத்தில் மறு தேர்வு நடத்த வேண்டும். அதில் தேர்ச்சி பெற வேண்டும். தவறினால் அந்த மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பிலே தொடர்வார்கள். இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம், தேஜ கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை `ஆல் பாஸ்’ வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள அரசாணைப்படி, புதுச்சேரியில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு `ஆல் பாஸ்’ வழங்கும் முறை ரத்து செய்யப்படும். இனி 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் செல்ல முடியும் என்றனர்.
The post 5, 8ம் வகுப்புகளுக்கு புதுச்சேரியில் இனி `ஆல் பாஸ்’ இல்லை appeared first on Dinakaran.