ஊட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று ஊட்டிக்கு வந்தார். 15ம் தேதி மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். மேலும் அரசு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. இம்மலர் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை வந்தார். காலை 11 மணியளவில் அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், தமிழ்நாடு அரசு கொறடா இளித்துறை ராமச்சந்திரன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், கோவை சரக டிஐஜி சசிமோகன், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், எம்.பிக்கள் ஆ.ராசா, கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட பலர் புத்தகம் வழங்கி வரவேற்றனர்.
தொடர்ந்து காரில் ஊட்டிக்கு முதல்வர் புறப்பட்டு சென்றார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர். அங்கு ஒரு சிறுவன் முதல்வருக்கு ரோஜாப்பூ கொடுத்தான். உடனே சிறுவனுக்கு முதல்வர் சாக்லெட் வழங்கி மகிழ்ந்தார். நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனை பகுதியில் நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மலர் கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். தொடர்ந்து கோத்தகிரி பகுதியில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஊட்டிக்கு வந்த அவருக்கு சேரிங்கிராஸ் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்து தமிழ்நாடு மாளிகை வந்த முதல்வர் அங்கு தங்கினார். வரும் 15ம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச பட்டா உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார் தலைமையில் நின்றிருந்த திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது அங்கு ஒரு சிறுவன் முதல்வருக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றான். பதிலுக்கு அந்த சிறுவனுக்கு முதல்வர் சாக்லெட் வழங்கி மகிழ்ந்தார்.
முதுமலை புலிகள் காப்பகத்தை இன்று பார்வையிடுகிறார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று பார்வையிடுகிறார். இதனால், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று காலை மட்டுமே அனுமதி வழங்கப்படும். பிற்பகலுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டாது என முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post 5 நாள் அரசு முறை பயணம் ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு: 15ம் தேதி மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார் appeared first on Dinakaran.