புதுடெல்லி: நாணயங்களை விட அன்றாட பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதையே பொதுமக்கள் விரும்புவதால், 50 ரூபாய் நாணயத்தை சந்தையில் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 'இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பின்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புள்ள நாணயங்களை விடவும், ரூபாய் நோட்டுகளுக்கே பொதுமக்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே, 50 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் துறையின் பரிசீலனையில் இல்லை. இந்த கணக்கெடுப்பின்போது, எடை மற்றும் அளவு போன்றவை நாணயங்களின் பயன்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க தடைகளாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.