டெல் அவிவ்: 59 பணயக்கைதிகளை விடுவிக்கும் விசயத்தில் இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வேண்டும் எனக்கோரி தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள பிகின் தெரு மற்றும் ஹபிமா சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஒன்று கூடி, காசாவில் ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்ட 59 பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களில், ஹமாஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் பணயக்கைதிகளான ஓமர் ஷெம் டோவ், மாயா ரெகேவ், இடாய் ரெகேவ் ஆகியோர் உரையாற்றினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ‘கைதிகளை மீட்கும் பொறுப்பு உங்களுடையது (இஸ்ரேல் பிரதமர் ெநதன்யாகு); பணயக்கைதிகள் ஹமாஸ் பிடியில் இருக்கும் வரை சுதந்திரம் இல்லை; நெதன்யாகுவால் இஸ்ரேலுக்கு ஆபத்து’ என்று கூறினார். மேலும் இதுபோன்ற கோரிக்கைகளை வலியுத்தும் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். காசா மீதான ராணுவ நடவடிக்கைகள் போதாது என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இஸ்ரேலிய பத்திரிகையாளர் கிடியோன் லெவி கூறுகையில், ‘இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன என்றாலும், நெதன்யாகுவின் கூட்டணி அரசை வீழ்த்தும் அளவிற்கு வலுவான எதிர்ப்பு இல்லை. காசாவில் மீண்டும் தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகள், பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக ஹமாசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்படும் என இஸ்ரேல் அரசு தரப்பில் கூறினாலும், நாட்கள் கடந்து செல்வதால் பணயக்கைதிகளின் உயிருக்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும். ஒவ்வொரு நாளும் போர் நீடிக்கும் போதும் இஸ்ரேலின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன’ என்றார்.
The post 59 பணயக்கைதிகளை விடுவிக்க தாமதம்: இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.