கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி, குற்றவாளிகளை நேரில் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 8-க்கும் ேமற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்செயல் தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் புகார் அளித்ததின்பேரில், பொள்ளாச்சி டவுன் போலீசார் முதலில் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு, சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். மேலும், ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், 50-க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர், விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். இவ்வழக்கில், ஒவ்வொரு வாய்தாவின்போதும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவுபெற்றுள்ளன.
இதையடுத்து, கைதான 9 பேரிடம், சட்ட விதிகள் 313-ன் கீழ் கேள்விகள் கேட்பதற்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் கடந்த 5ம்தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது, ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர். இந்த நடைமுறை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன்பிறகு, இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது. அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து, இதர நாட்கள் அனைத்திலும் குறுக்கு விசாரணை, இருதரப்பு வக்கீல்கள் வாதம் தொடர்ச்சியாக நடந்து வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை கடந்த மாதம் 28ம்தேதி மீண்டும் நடந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.நந்தினிதேவி, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை என அனைத்தும் நிறைவுபெற்று விட்டதால், வரும் மே 13ம்தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், அன்றையதினம் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சிபிஐ-க்கு மாற்றம் ஏன்?
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2019-ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே அதிர வைத்தது. குற்றவாளிகளை பாதுகாப்பதில் உள்ளூர் அதிமுக புள்ளிகள் சிலர் பின்பலமாக இருக்கிறார்கள் என புகார் எழுந்த காரணத்தால், இவ்வழக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதன் எதிரொலியாகத்தான் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
தனி அறையில் விசாரணை;
வழக்கமாக, பாலியல் வழக்கு அல்லாத பிற வழக்குகள் கோர்ட்டுகளில் சாதாரண நடைமுறைப்படியே நடக்கும். வழக்கு விசாரணையின்போது கோர்ட் ஹால் திறந்திருக்கும். இருதரப்பு வக்கீல்களும் கோர்ட்டில் குவிந்து இருப்பார்கள். குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் கோர்ட் வளாகத்தில் குவிந்திருப்பார்கள். போலீசார் மற்றும் பத்திரிகையாளர்களும் திரண்டிருப்பார்கள். ஆனால், இந்த வழக்கு விசாரணை முற்றிலும் மாறுபட்ட நிலையில் நடந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் முதல் மாடியில், சப்தம் வெளியே கேட்காத வகையில், தனி அறை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, அங்கு மிக ரகசியமாக இந்த வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, தொடர்புடைய வக்கீல் மற்றும் சாட்சிகள் மட்டுமே இந்த கோர்ட்டுக்குள் அனுதிக்கப்பட்டனர். உளவுப்பிரிவு போலீசார் உள்பட இதர நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
The post 6 ஆண்டு இழுபறி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு: குற்றவாளிகளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு appeared first on Dinakaran.