தூத்துக்குடி: ஆறு மாத இடைவெளிக்கு பிறகு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் இலங்கைக்கு உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள், குண்டுக்கல், ஜல்லி கற்கள், கட்டுமானப் பொருட்கள், முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்ட தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய பேப்பர்கள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டே இயக்கப்படுகிறது.
மே மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30ம்தேதி வரை கடலில் கடினமான காலநிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படுவது இல்லை. செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம்தேதி வரை சுமூகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும். தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு 15 தோணிகளும், லட்சத்தீவுகளுக்கு 10 தோணிகளும் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தோணிகளில் சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த 6 மாத காலமாக தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சரக்கு போக்குவரத்து நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடியில் இருந்து தற்போது தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி துவங்கியுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தோணி உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த 1990ம் ஆண்டு வரை வாரத்துக்கு 4 தோணிகளில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மிளகாய் வத்தல், வெங்காயம் உள்ளிட்ட முக்கிய காய்கனிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன்பிறகு இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் கண்டெய்னர்களில் குறைந்த விலையில் வெங்காயம் உள்ளிட்டவை ஏற்றிச் செல்லப்பட்டதால் தோணி தொழில் பாதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் தோணி மூலம் இலங்கைக்கு சரக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கடல் சீதோஷ்ன நிலையை கருத்தில் கொண்டே சரக்கு தோணிகள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் தோணி போக்குவரத்து துவங்கியுள்ளது. மேலும் பல்லாரி வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரி 20% குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து வெங்காயம் ஏற்றுமதி மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தோணியில் வெங்காயம் ஏற்றும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. தோணியில் சுமார் 200 டன் வரை வெங்காயம் கொண்டு செல்லப்பட உள்ளது. இன்று தோணி புறப்பட்டு நாளை கொழும்பு சென்றடையும் என்றனர்.
The post 6 மாத இடைவெளிக்கு பிறகு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி appeared first on Dinakaran.