ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இம்முறை வலுவாக களமிறங்குகிறது. முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ்.தோனி முழு உடற்தகுதியுடன் இருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடும். கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடிய தோனி கேமியோ ரோல் மட்டுமே செய்தார். இறுதிக்கட்ட ஓவர்களில் களமிறங்கி 8 முதல் 10 பந்துகளை சந்தித்து பெரிய அளவிலான சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியிருந்தார். ஆனால் இம்முறை அவர், முழு உடற்தகுதியுடன் இருப்பதால் எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளிக்கக்கூடும்.
சிஎஸ்கேவின் கடந்த கால வரலாற்றில் அந்த அணியின் தொடக்க ஜோடிகள் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியிருந்தன முரளி விஜய்-மேத்யூ ஹைடன், முரளி விஜய்-மைக்கேல் ஹஸ்ஸி, ஷேன் வாட்சன்-டு பிளெஸ்ஸிஸ், ருதுராஜ் கெய்க்வாட்-டேவன் கான்வே ஜோடி என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் கடந்த 2024 சீசனில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியது. தொடக்க ஜோடியின் சராசரி 21.42 ஆக இருந்தது.