லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் 2வது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 7ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. 6வது நாளாக நேற்று முன்தினமும் காட்டுத் தீ தொடர்ந்து பரவியது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் மேற்கு மலைகளில் பரவிய கென்னீத் மண்டலத்தில் 100 சதவீத தீ அணைக்கப்பட்டு விட்டது. ஆனாலும், பலிசடீஸ் மண்டலத்தில் 11 சதவீத தீயும், ஈட்டனில் 27 சதவீத தீயும் அணைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தீயால் பள்ளிகள் மூடப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சான்டா அனா எனும் பேய்க் காற்று மீண்டும் இன்று முதல் வீசத் தொடங்க இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. மிகுந்த உலர்ந்த வேகமாக வீசக்கூடிய இந்த காற்று தான் காட்டுத்தீ வேகமாக பரவ காரணம். சமவெளிப் பகுதியில் சான்டா அனா காற்று மணிக்கு 80 கிமீ வேகத்திலும் மலைப்பகுதிகளில் 130 கிமீ வேகத்திலும் வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. குறிப்பாக இன்று காற்றின் வேகம் மிக வேகமாக இருக்கக் கூடும் என்கிற எச்சரிக்கைகள் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.
* என்ன காரணம்?
காட்டுத்தீ பரவி ஒருவாரம் ஆன நிலையில் இன்னமும் இந்த தீ எப்படி தொடங்கியது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் குழம்பிப் போய் உள்ளனர். லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 8 மாதமாக மழை இல்லாததால் அனைத்து மரம் செடிகளும் வறண்டு போயுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் சான்டா அனா காற்று தீயை வேகமாக பரவச் செய்கிறது. பொதுவாக மின்னல் வெட்டுவதால் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் லாஸ் ஏஞ்சல்சில் சமீபத்தில் இடி மின்னல் ஒருமுறை கூட ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே மின்கசிவு போன்ற காரணத்தால் காட்டுத் தீ உருவானதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விடை தெரியாமல் விசாரணை நடந்து வருகிறது.
The post 6 நாளாக எரியும் காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சில் பலி 24 ஆக அதிகரிப்பு: மீண்டும் இன்று முதல் பேய் காற்று வீசும் என்கிற எச்சரிக்கையால் பீதி appeared first on Dinakaran.