சென்னை: 62,197 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.170.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாரிய குடியிருப்புகளிலுள்ள இளம் பெண்களுக்கு ரூ.80.00 இலட்சம் செலவில் நல்வாழ்வு மற்றும் சுகாதார பெட்டிகள் வழங்கப்படும் எனவும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்;
1. சென்னை மற்றும் இதர நகரங்களில் வாரியத்தின் பராமரிப்பிலுள்ள 134 திட்டப்பகுதிகளில் 62,197 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.170.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மற்றும் இதர நகரங்களில் வாரியத்தின் பராமரிப்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதியினை உறுதி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாநில நிதி மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறையால் செயல்படுத்தப்படும் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்ட நிதியுதவியுடன் ரூ.170.00 கோடி திட்ட மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
2. பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் வாரியத்தின் பராமரிப்பிலுள்ள 8,352 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெரும்பாக்கம் மறுகுடியமர்வு திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட வீட்டு வசதி அளித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இக்குடியிருப்புகளுக்கு ரூ.70.00 கோடி திட்ட மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
3. ஒக்கியம் துரைப்பாக்கம் – எழில் நகர் திட்டப்பகுதியில் வாரியத்தின் பராமரிப்பிலுள்ள 6,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஒக்கியம் துரைப்பாக்கம் – எழில் நகர் மறுகுடியமர்வு திட்டப்பகுதியில் வாரியத்தின் பராமரிப்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட வீட்டு வசதி அளித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஏதுவாக இக்குடியிருப்புகளுக்கு ரூ.40.00 கோடி திட்ட மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
4.திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்காக 320 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.54.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக 320 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.54.40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும். இக்குடியிருப்புகள் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
5. பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும்.
பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களது தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் போதிய இடம் வழங்க ரூ.5.00 கோடி திட்ட மதிப்பீட்டில் தனியாக ஒரு படைப்பகம் அமைக்கப்படும். இக்கட்டடம் விரிவான படிப்பு அறை, தனிப்பட்ட பயிலும் இடம், இணைய வழி கற்றலுக்கான இடங்கள் மற்றும் பிற வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
6. ஒக்கியம் துரைப்பாக்கம் – கண்ணகி நகர் திட்டப்பகுதியில் ரூ.2.00 கோடி திட்ட மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டிற்காக முதல்வர் திறனகம் அமைக்கப்படும்.
ஒக்கியம் துரைபாக்கம் – கண்ணகி நகர் திட்டப்பகுதியில் 3,000 சதுர அடி பரப்பில் ரூ.2.00 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒரு நவீன தொழில் பயிற்சி மையம் கட்டப்படும். நவீன தொழிற்பயிற்சிக்கான உட்கட்டமைப்புகள், தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் போன்ற கட்டமைப்புகள் இந்த மையத்தில் ஏற்படுத்தப்படும்.
7. வாரிய குடியிருப்புகளிலுள்ள இளம் பெண்களுக்கு ரூ.80.00 இலட்சம் செலவில் நல்வாழ்வு மற்றும் சுகாதார பெட்டிகள் வழங்கப்படும்.
சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் வாழும் 11,772 இளம் பெண்களுக்கு நல்வாழ்வு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார பெட்டிகள் வழங்கப்படும்.
8.பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்படும்.
பெரும்பாக்கம் திட்டப்பகுதியில், சுய உதவிக்குழுக்களுக்கான பொது பயன்பாட்டு மையம் ரூ.40.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த பணியிடம் உற்பத்தி, பயிற்சி மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளுக்காக தனி இடங்களை வழங்கும்.
The post 62,197 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.170.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் appeared first on Dinakaran.