விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் நகரில் 63.5 செ.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனாலும் நீர்நிலைகள் சரிவர பராமரிக்கப்படாததால் இந்த அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தும் சில நிரம்பாமல் இருக்கிறது. அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் விழுப்புரம் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஐயனார் கோயில் குளம். திருவிக சாலையையொட்டி 4.16 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோயில் குளம், விழுப்புரம் நகரத்தின் முக்கிய நீர் நிலையாக திகழ்ந்து வருகிறது.
28.11.1962 அன்று நடந்த விழுப்புரம் நகர்மன்றக் கூட்டத்தில் “பெண்ணையாற் றில் இருந்து விழுப்புரம் நகர் வழியாகச் செல்லும் கோலியனூர் வாய்க்காலில் வரும் நீரை இந்நகருக்கு மையத்தில் இருக்கும் ஐயனார் குளத்துக்கு கொண்டு வந்து நிரப்பினால், நகரில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயரும். மக்களுக்கு தேவைப்படும் நீரை மேற்படி வாய்க்காலில் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நிரந்தர உத்தரவு கொடுக்க வேண்டும்” என உறுப்பினர் வேணுகோபால் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.