சென்னை: “கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 4 இடங்களில் மிக கனமழையும், 72 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறையும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (டிச.12) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 4 இடங்களில் மிக கனமழையும், 72 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.