கேப் கெனாவரெல்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் 9 மாதமாக சிக்கியிருக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்று காலை பூமிக்கு புறப்படுகிறார். அவர், இந்திய நேரப்படி நாளை அதிகாலை பூமியை வந்தடைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வம்சாவளியினரான அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ம் தேதி ஒருவார பயணமாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் அந்த விண்கலம் மட்டும் தனியாக பூமிக்கு திரும்பியது. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்டனர். இதற்கிடையே, சுனிதா, வில்மோர் மற்றும் ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள மற்ற விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக 4 பேர் கொண்ட புதிய குழுவுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. அங்கு புதிய குழுவினரை சுனிதா உள்ளிட்ட வீரர்கள் கைகுலுக்கி விண்வெளி நிலையத்திற்கு வரவேற்றனர்.
இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உட்பட 4 வீரர்கள் இன்று விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இன்று காலை 8 மணி அளவில் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் புறப்பாடு தொடங்க இருக்கிறது. அந்த விண்கலம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புளோரிடா கடலில் விண்கலம் தரையிறங்கும். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.
The post 9 மாதங்களுக்குப் பிறகு விண்வெளி மையத்திலிருந்து இன்று புறப்படுகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா நேரடி ஒளிபரப்பு appeared first on Dinakaran.