காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் தங்களது 900-வது நாள் போராட்டமாக கருணாநிதியின் நினைவிடத்தில் மனு அளிக்க புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் தங்களுடன் கொண்டு வந்திருந்த கருணாநிதியின் உருவப்படத்திடம் மனு அளித்தனர்.
சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து அப்பகுதி மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.