சென்னை: தமிழகத்தில் 99.60% நியாயவிலைக் கடையில் கைரேகை பதிவு செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில், கோவிந்தம் பாளையம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு முன்வருமா எனவும், நியாய விலை கடையில் கைரேகை மூலம் பொருட்கள் பெறப்படுவதால் காலதாமதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் விரைவில் அமைக்கப்படும் எனக் கூறினார். மேலும், நியாய விலை கடையில் கைரேகை பதிவு ஒன்றிய அரசின் வலியுறுத்தலில் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதிமுக ஆட்சியில் 60% ஆக இருந்த நிலையில் தற்போது 99.60% நியாயவிலை கடையில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதோடு , கைரேகை பதிவில் பிரச்னை ஏற்பட்டால் கண் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நகர பகுதியில் உள்ள நியாய விலை கடையில் கட்டுநர் உள்ளதால் பொருட்கள் எளிதில் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் கட்டுநர் இல்லாத காரணத்தால் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. கிராமப் பகுதியில் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
The post 99.60% நியாயவிலை கடையில் கைரேகை பதிவு: சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி பதில் appeared first on Dinakaran.