சென்னை : சொத்து வரி உயர்வை கண்டித்து, தமிழகம் முழுதும், அ.தி.மு.க., சார்பில், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., தலைமை அறிக்கை:
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றும் வகையில், சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியுள்ளது. அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.கடந்த, 11 மாதமாக மக்கள் விரோத நடவடிக்கை தொடர்கிறது.
அராஜக ஆட்சி முறையை எதிர்த்தும், மக்கள் நலன் கருதி சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க., சார்பில் மாவட்ட வாரியாக, நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும்; திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிப்பர்.
மற்ற மாவட்டங்களில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை நிலைய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘குடிநீர் வரி உயர வழிவகுக்கும்’
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:
குடிநீர் வரி என்பது, மாநகராட்சியின் ஆண்டு மதிப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால், அரசின் சொத்து வரி உயர்வு அறிவிப்பு, குடிநீர் வரி உயர்வுக்கும் தானாக வழிவகுக்கும். இந்த வரி உயர்வின் வாயிலாக, சொந்த வீடுகள் வைத்திருப்போர் மட்டுமின்றி, வாடகைக்கு குடியிருப்போரும் பாதிக்கப்படுவர்.
சொந்த கட்டடங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள், அவற்றில் வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளியோரின் வாடகையை உயர்த்தும் நிலை ஏற்படும். மாத வாடகை அடிப்படையில் கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லுாரிகள் நடத்துவோரும் கூடுதல் சுமைக்கு ஆளாவர்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும், பள்ளி மற்றும் கல்லுாரிகளின் கட்டணமும் வெகுவாக உயரும்.இதனால், அனைத்து தரப்பினரும், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.