இரு பெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்றையே மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் ஏனைய கட்சிகளுக்கு ஒரு பாடத்தைத் தமிழக மக்கள் சொல்லியிருப்பதாகவே தோன்றுகிறது. இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக, தங்களை முன்னிறுத்திக்கொண்டு மூன்றாவது இடத்துக்கு முயன்ற நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை. அதோடு அல்லாமல் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்கு வித்தியாசங்களைக்கூட அவற்றால் பெற முடியவில்லை. இந்தத் தேர்தல் முடிவிலிருந்து தங்களை சுயபரிசீலனைக்கு உள்ளாக்கிக்கொள்ளாவிட்டால் இதே கனவை முன்னதாகக் கொண்டிருந்த மதிமுக, பாமக, தேமுதிக சென்ற வழியிலேயே இக்கட்சிகளும் செல்ல வேண்டியிருக்கும். தமிழகத்தில் எப்போதுமே மூன்றாவது கட்சியொன்றின் தேவை உணரப்படுகிறது. இரு கழகங்களுக்கும் மாற்று என்கிற சிந்தனை அரை நூற்றாண்டாக இங்கு சுழல்கிறது. ஆனால், இந்தப் பாதையை நோக்கி முன்னதாக வந்தவர்கள் ஏன் சறுக்கினார்கள் என்பதைப் புதிதாக இப்பாதை நோக்கி வருபவர்கள் புரிந்துகொள்ள முற்படுவது இல்லை.
தேசியக் கட்சியினர் தமிழ்நாட்டு மக்கள் பாழில் கிடப்பதாகவும், தங்களை மீட்பவர்களாகவும் கருதுவதோடு தமக்கான உத்தரவுகளை மேலிருந்து பெறுபவர்களாகவும் இருக்கின்றனர்; இதைத் தமிழ்நாட்டு மக்கள் வெறுக்கின்றனர். தம்மை ஆள்பவர்கள் தமக்கான முடிவை அவர்களாகவே எடுக்க வேண்டும் என்றும் தமிழர்கள் விரும்புகின்றனர். இதைப் புரிந்துகொள்ளாததன் விளைவாகவே தேசியக் கட்சிகள் இந்தப் பாதையில் சறுக்கின. தமிழ்நாட்டுக்குள்ளேயே உருவான ஏனைய கட்சிகள் எங்கோ ‘எல்லோருக்குமான இயக்கம்’ என்று கருதும் இடத்தை எல்லோரிடத்திலும் உருவாக்கத் தவறின. முக்கியமாக, கட்சி அளவிலான அதிகாரத்தையே அவற்றால் பரவலாக எடுத்துச்செல்ல முடியவில்லை. அரசியல் நிலைப்பாடுகளிலும் உறுதி இல்லை. தேர்தல் சமயங்களில் அவற்றிடமிருந்து வெளிப்படும் தீவிரச் செயல்பாடு மக்கள் எதிர்பார்க்கும் எல்லா சமயங்களிலும் வெளிப்படுவதில்லை. இவை எல்லாவற்றையுமே மக்கள் கவனிக்கின்றனர். நாதகவைப் பொறுத்தவரை அதன் தலைவர் சீமான் முன்வைக்கும் பல விஷயங்கள் நடைமுறைக்கு அப்பாற்பட்டதாகவும், அதீதப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. மநீம தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய சொந்தத் தொகுதியில் செலவிட்ட நேரத்தில் சரிபாதிகூட அந்தக் கட்சி ஒட்டுமொத்தமாகப் போட்டியிட்ட தொகுதிகளிலும் செலவிட்டிருக்க மாட்டார். ‘அரசியலைப் பகுதிநேரப் பணியாகக் கருதுவதே நல்லது’ என்று வெளிப்படையாகப் பேசுபவர் இப்படிச் செயல்படுவதில் ஆச்சரியம் இருக்க முடியாது. அமமுக தலைவர் தினகரன் கிட்டத்தட்ட தன் கட்சியை அறிவிக்கப்படாத ஒரு சாதிக் கட்சியாகவே களத்தில் முன்னெடுத்துச்சென்றார்.
ஆக, அவரவர் தோல்விக்கான காரணங்கள் அவரவர் செயல்பாடுகளிலேயே இருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வழியே மக்கள் சில நுட்பமான செய்திகளை உறுதிபடத் தெரிவிக்கின்றனர். நிச்சயமாக மூன்றாவது குரல் ஒன்றுக்கான தேவை இருக்கிறது. பாடம் கற்றால் நல்லது!
ALTERNATIVE POLITICS TAMILNADU