சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் பொன்விழா மற்றும் இந்தி மாத நிறைவு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழி பேசும் தமிழ்நாட்டில் இந்தி மாத விழா என்ற அறிவிக்கப்பட்டது பலத்த எதிர்ப்புக்குள்ளானது. அரசியல் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதமும் எழுதினார். இந்த நிலையில் நேற்று சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாத நிறைவு விழா நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது என்றும், இந்த நிலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த மொழி சமஸ்கிருதம் என்று பேசினார். அதோடு அல்லாமல் இந்தியை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, ‘‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’’ என்ற வரி தவிர்க்கப்பட்டு பாடப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் தனது எக்ஸ் தளத்தில், ‘‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். அவர் ஆளுநரா? ஆரியநரா?” என்று மிகவும் காட்டமாக பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டு பாடச் சொல்வரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். திராவிடம் என்ற வாசகத்தை தவிர்த்தது மிகப்பெரிய பித்தலாட்டம் என்று அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநருக்கு இதுபோன்ற எதிர்ப்புகளும், கண்டனங்களும் ஒன்றும் புதிதல்ல. ஆளுநராக பதவியேற்றதில் இருந்தே அவர் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
அதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தாலும் அவரது சர்ச்சை பேச்சுகளும், சர்ச்சை நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்காமலும், முக்கிய மசோதாக்களில் கையெழுத்திடாமலும் மாதக்கணக்கில் கிடப்பில் போட்டுக்கொண்டு முடிவு எடுக்காமல் இருந்தது போன்ற நடவடிக்கைகளுக்கு கோர்ட் குட்டு வைத்தும் ஆளுநர் தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.
தமிழ்மொழியை இழிவுபடுத்தி, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் உயர்த்தி பிடிப்பதை தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் கூட ரசிக்கவில்லை என்பதை அவர் உணரவில்லை.
அதற்கு உதாரணமாகத்தான் திராவிடம் என்ற வார்த்தை தவிர்ப்பு சம்பவம் நடந்துள்ளது. கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறாக விட்டுவிட்டதாக தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ளது. இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை என்று ஆளுநர் ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்திருப்பது திராவிடத்துக்கு எதிராக இஷ்டபடி நடந்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் நடந்ததாகவே கருதப்படுகிறது. எனவே, இனியும் தமிழ்நாட்டு ஆளுநராக ஆர்.என். ரவி நீடிக்கலாமா என்பது கேள்விக்குறியே.