இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதால், உள்நாட்டுக்குள் வேலைக்காகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தம் சொந்த ஊர் திரும்ப வழியின்றி நிலைகுலைந்திருக்கின்றனர். ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் பல நூறு தொழிலாளர்கள் கொடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தோடு, குழந்தைகளை நடக்க விட்டும் தூக்கிக்கொண்டும் டெல்லியிலிருந்து பல நூறு கிமீ தொலைவிலுள்ள தம் சொந்த ஊர்களை நோக்கி நடந்து செல்லலானதும், இதில் இருபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோனதும், மானுடத் துயரம்.
ஊடகங்கள் இதைப் பெரும் செய்தியாக்கிய பிறகு, கண்துடைப்பாக சிறப்புப் பேருந்துகளை அனுமதித்தது மத்திய அரசு; அடுத்த நாளே தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சியைத் தடுத்து கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்ததோடு, இத்தொழிலாளர்களை அவர்கள் பிழைக்கச் சென்ற மாநிலங்களே பராமரிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் அந்தப் பேருந்துகளில் ஏறுவதற்காகக் காத்திருந்தோர் வரிசையே இரண்டு கிமீ நீண்டது எதைச் சொல்கிறது? இன்றைய நகரங்களின் வண்டிச் சக்கரங்கள் அவர்கள். ஆனால், எந்த முடிவெடுக்கும்போதும் அரசு அவர்கள் வாழ்வைப் பொருட்படுத்துவதே இல்லை. பேருந்துகள் நிரம்பி வழியத் தொங்கிக்கொண்டும், பேருந்தின் மேலே அமர்ந்துகொண்டும் நெருக்கிச் சென்றார்களே, அப்போது அரசு வலியுறுத்தும் இடைவெளி எங்கே போனது? அதில் கரோனா தொற்றிய ஒரே ஒரு நோயாளி இருந்திருந்தாலும் எத்தனை பேரை, ஊரை அது சுற்றிப் பரவும்? இதற்கு யார் காரணம்?
அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்தியா இரு மாதங்களுக்கு முன்பே விமான நிலையங்களைக் கடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும்; அதற்கு முன் கரோனா பெருவெடிப்பான செய்தி வெளியான உடனேயே சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தியிருக்க வேண்டும். எல்லாமே தாமதம். மெத்தனம்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் மத்திய அரசின் யோசனை சரியானதாக இல்லை. அன்றாடக் கூலி அடிப்படையிலேயே அவர்களுடைய இருப்பு ஒரு நகரத்தில் நீடிக்கிறது. வேலை நிறுத்தப்படும்போது அவர்களது இயக்கத்துக்கான சுவாச வாயு திணறலாகிவிடுகிறது. அடுத்து என்ன என்பது உண்மையில் இப்போது நம் யார் கையிலுமே இல்லை; அது நோய்ப் பரவலின் திசையில்தான் உள்ளது. குடிநீருக்கே அடுத்தவரை எதிர்நோக்கும் நிலையில் இருக்கும் நகரங்களிலிருந்து அவர்கள் வெளியேற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு ஏற்பாடுசெய்வதே சரியானது. கால தாமதம் பெரும் அலைக்கழிப்பில் ஆழ்த்திவிடும்.