பல்வேறு கூட்டணிகளை உடைத்து, வெற்றிக்கு எதெல்லாம் தேவையா, அவற்றையெல்லாம் வாரி சுருட்டுகிற பாஜவின் பாசாங்கு முகம் மக்கள் மன்றத்தில் இன்னமும் வெளுத்தபாடில்லை. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஒரு அவியல் கூட்டணியை உருவாக்கி, மக்கள் எங்கள் பக்கம்தான் எப்போதும் உள்ளனர் என பாஜ பரப்புரை செய்து வருகிறது. இருப்பினும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வெற்றி, அதை தொடர்ந்து இப்போது ஜார்க்கண்டில் வெற்றி என இந்தியா கூட்டணியும், பாஜவை பதம் பார்த்தே தீருவது என்கிற நோக்கோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இச்சூழலில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்ட தொடருக்கு பெயர்தான் ‘குளிர்கால கூட்ட தொடர்’ என இருக்குமே தவிர, நிச்சயம் அனல் பறக்கும். இன்றளவில் இந்தியாவையே மறைமுகமாக ஆளுகிற அதானி குழுமம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி நிலையங்கள் என பலவற்றை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்து விட்டது. சூரியசக்தி திட்டத்தில், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததோடு மட்டுமின்றி, அமெரிக்க பங்குசந்தை முதலீட்டாளர்களின் முகத்திலும் கரியை பூசிவிட்டனர்.
இதையடுத்து அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அதானிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கையிலும் அதானி குழுமத்தின் மீது பங்குசந்தை வர்த்தக முறைகேடு புகார்கள் உள்ளன. இந்நிலையில் இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியை கிளப்பும்.
இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் லஞ்சம் கொடுத்து பங்குசந்தைகளை நிர்வகிப்பது என்றால், அதானி குழுமத்தின் வரவு, செலவுகள்தான் என்ன என்பது கேள்விக்குள்ளாக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அதானி, அம்பானி குழுமங்களை கண்ணின் இமைபோல் காத்து வரும் பாஜவினர், தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே குறியாக உள்ளனர். அதற்காக நாட்டை குறிப்பிட்ட சிலருக்கு விற்று விடவும் துணிந்து விட்டனர். அதானி குழுமத்தின் அராஜகத்தை பேசி, அவரை கைது செய்யக்கோரி இன்று முதல் நாடாளுமன்றத்தை முடக்கவும் எதிர்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.
இந்தியாவின் மதச்சார்பின்மையை அடிக்கடி பரிசோதிக்கும் பாஜவினர், நடப்பு கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற முனைவர். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இக்கூட்ட தொடரில் மட்டுமே 15 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வக்பு வாரிய சட்டத்திருத்தம் என்ற பெயரில் ஒன்றிய அரசு வக்பு சொத்துகளை கையகப்படுத்த திட்டமிடும் நிலையில், இம்மசோதாவிற்கு எதிராக எதிர்கட்சிகள் பூதாகரமாக பிரச்னையை கிளப்பும். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது என்பது பல்வேறு அரசியல் கட்சிகளும் அறிந்த ஒன்றாகும்.
இந்த கூட்ட தொடரில் நாளை நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு சட்டம் ஏற்று கொள்ளப்பட்ட 75வது ஆண்டு விழாவும் கொண்டாடப்பட உள்ளது. பாஜ மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவினர், இன்று தொடங்க போகும் குளிர்கால கூட்ட தொடரை சுமூகமாக நடத்திட முயற்சிகளையும் மேற்கொண்டனர். இருப்பினும் அதையெல்லாம் தாண்டி, ஒன்றிய அரசின் புதிய மசோதாக்களும், அதானி குழுமத்தின் அத்துமீறிய ஆட்டங்களும் நிச்சயம் புயலை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.