‘எண்ட் கேம்’ படத்துடன் ஸ்டீவ் ரோஜர்ஸ் கதாபாத்திரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு ‘ஃபால்கன்’ என்ற சூப்பர் ஹீரோவாக இருந்த சாம் வில்சனை புதிய கேப்டன் அமெரிக்காவாக ஒரு வெப் தொடர் மூலம் அறிமுகப்படுத்தியது மார்வெல். தற்போது புதிய கேப்டன் அமெரிக்காவுக்காக பிரத்யேக முதல் படமாக வெளியாகியுள்ள ‘கேப்டன் அமெரிக்கா: ப்ரேவ் நியூ வேர்ல்ட்’ (Captain America: Brave New World) எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
ராணுவத் தளபதியாக இருந்து பழைய கேப்டன் அமெரிக்கா, ஹல்க் போன்ற சூப்பர் ஹீரோக்களை துரத்திய தண்டர்போல்ட் ராஸ் (ஹாரிஸன் ஃபோர்ட்) தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ளார். இந்திய பெருங்கடலில் திடீரென தோன்றிய ‘செலஸ்டியல்’ தீவில் இருக்கும் ‘அடமான்டியம்’ (எக்ஸ்-மென் குறியீடு) யாருக்கு சொந்தம் என்பதில் இந்தியா, ஜப்பான், அமெரிக்க, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இப்படியான சூழலில் புதிய கேப்டன் அமெரிக்காவான சாம் வில்சனிடம் (ஆண்டனி மெக்கி) புதிய அவெஞ்சர்ஸ் குழு ஒன்றை உருவாக்குமாறு அதிபர் கோரிக்கை வைக்கிறார். அதற்கான முக்கியத்துவத்தையும் சொல்கிறார்.