தமிழகம் கண்ட மகத்தான அரசியல் தலைவரான பேரறிஞர் அண்ணா, இந்திய அரசியல் வானின் தனித்துவமான நட்சத்திரம். பிரிட்டிஷ் காலனிய இந்தியாவில் ஒன்றோடு ஒன்று முட்டிமோதி முகிழ்ந்த சிந்தனைகளில் அண்ணாவினுடைய சிந்தனை இந்தியாவை மேலும் ஜனநாயகத்தன்மை மிக்கதாக, மேலும் பன்முகத்தன்மை மிக்கதாக, மேலும் தனிநபர் சுதந்திரம் மிக்கதாக விஸ்தரிக்க வல்லது.
தமிழ்நாட்டை ஒட்டியுள்ள இன்றைய தென்னக மாநிலங்களை இணைத்து ‘திராவிட நாடு’ கேட்டவர் அண்ணா. சீனப் படையெடுப்பு, பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம், மாறிக்கொண்டிருந்த புவி அரசியல் சூழல்களின் பின்னணியில் ‘திராவிட நாடு’ முழக்கத்தைக் கைவிட்ட அண்ணா, இந்திய அரசமைப்புக்கு உட்பட்ட மாநிலங்களின் சுயாட்சியைத் தன்னுடைய முழக்கமாக்கினார். எப்படியும் அண்ணாவின் நோக்கம் அதிகாரப் பரவலாக்கத்திலும் கூட்டாட்சியின் வலிமையிலும் நிலைகொண்டிருந்தது. மாநிலங்களால் ஆன இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவமும் சாதிகளால் பிளவுண்டிருக்கும் இந்தியச் சமூகத்தில் எல்லாச் சாதிகளுக்கும் சமமான வாய்ப்புகளையும் கோரியவர் அண்ணா.
நவீன இந்தியா எந்தப் பன்மைத்துவத்தைத் தன்னுடைய ஆன்மாவாகக் கொண்டிருக்கிறதோ, எந்தக் கூட்டாட்சித் தத்துவத்தை அதன் கனவாகக் கொண்டிருக்கிறதோ, தேசப்பிதா காந்தி எப்படி டெல்லியில் அல்லாது இந்தியாவின் அத்தனை கிராமங்களுக்கும் அதிகாரம் செல்ல வேண்டும் என்று எண்ணினாரோ, அதே விஷயங்களையே வேறொரு வடிவில் வலியுறுத்தினார் அண்ணா.
இந்திய தேசியத்தின் கடுமையான விமர்சகர் என்றபோதிலும், இன்று திரும்பிப் பார்க்கையில் இந்தியா எனும் கருத்துக்கு, இந்தியாவின் வண்ணங்களுக்குச் செழுமை சேர்த்தவராகவே அண்ணாவைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு அற்புதமான, பரந்துவிரிந்த ஜனநாயகக் கூட்டாட்சிக்கான கற்பனையை அண்ணா நமக்குத் தருகிறார்.
ஜனநாயகத்தில் தேர்தல் என்பது ஒரு நீண்ட பயணத்தின் தொடக்கம்தான்; அதோடு மக்களுடைய ஜனநாயகக் கடமை முடிந்துவிடுவதில்லை. ஜனநாயகம் என்பது காலமெல்லாம் செழித்துக்கொண்டே இருக்க வேண்டிய ஓர் உயிர். அந்த அளவில் தேர்தல் காலம் நம் நாட்டைப் பற்றியும் நம்முடைய ஜனநாயக சூழலைப் பற்றியும் அவற்றை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பது பற்றியும் சிந்திப்பதற்கான ஒரு தருணமாகிறது.
உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவான இந்தியத் தேர்தல்களை வெற்றுப் பரபரப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட தீவிரமான செயல்பாடாகவே ‘இந்து தமிழ்’ அணுகிவந்திருக்கிறது. 2014 மக்களவைத் தேர்தல் சூழலை ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடர் மூலம் சிந்தனைக் களமாக்கிய ‘இந்து தமிழ்’ நடுப்பக்கங்கள், 2019 தேர்தல் சூழலுக்கு அண்ணாவைக் கூட்டிவருகின்றன. பேரறிஞரின் நினைவைப் போற்றும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலை ஜனநாயகக் கொண்டாட்டத்தின் ஓர் பகுதியாக வெளியிடும் நாம் அந்நூலிலிருந்து சில பகுதிகளை அடுத்தடுத்த நாட்களில் நடுப்பக்கத்தில் வாசிக்கத் தருகிறோம். பல்லாயிரம் ஆண்டு தமிழ்ச் சிந்தனை மரபின் நீட்சி நம்முடைய குடியரசுக்குப் புத்தொளி கொடுக்கவும் நம்முடைய ஜனநாயக உணர்வு மேம்படவும் இது வழிவகுக்கட்டும்.