மும்பை: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவாகியுள்ள திரைப்படமான ‘சாவா’ (Chhaava) படத்துக்கு அனைத்து மாநிலங்களிலும் வரி விலக்கு வேண்டுமென சிவசேனா கட்சி (உத்தவ் அணி) எம்.பி பிரியங்கா சதுர்வேதி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தப் படத்தை லக்‌ஷ்மன் உடேகர் இயக்கியுள்ளார். இதில் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு மத்திய பிரதேசம் மற்றும் கோவாவில் வரி விலக்கு வழங்குவதாக அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்தப் படம் மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் சிறப்பு காட்சிகளுக்கும் அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன. வியாழக்கிழமை நிலவரப்படி இந்தப் படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது.