ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2019 மக்களவைத் தேர்தல், சட்ட மன்றத் தேர்தல் என்ற இரண்டு தேர்தல்களுக்கும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது காங்கிரஸ். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா – பிரஜாதந்திரிக் (ஜேவிஎம்-பி), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகிய கட்சிகளுடன் அம்மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளைக் கட்சிகளின் பலத்துக்கேற்ப பகிர்ந்துகொண்டுள்ளது. காங்கிரஸ் 7, ஜேஎம்எம் 4, ஜேவிஎம்-பி 2, ஆர்ஜேடி 1 என்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சட்ட மன்றத் தேர்தலில் அதிகத் தொகுதிகள் ஜேஎம்எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 சட்ட மன்றத் தேர்தலில் 31% வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது பாஜக. தற்போது கூட்டணியில் இணைந்திருக்கும் நான்கு கட்சிகளும் சேர்ந்து அந்தத் தேர்தலில் 47% வாக்குகளைப் பெற்றன. இந்தச் சூழலில், இந்தக் கூட்டணி வியூகம் பிற மாநிலங்களிலும் இக்கட்சிகளுக்கு முன்னோடியாக விளங்கக் கூடியது.
ஜார்க்கண்டில் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் பழங்குடிகள். எனவே, பழங்குடிகளுக்கான கட்சிகளின் பலத்தால் காங்கிரஸ் கூட்டணியால் அதிகமான வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முடியும். காங்கிரஸ், ஜேஎம்எம், ஆர்ஜேடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி 2004-ல் அப்படித்தான் அமோக வெற்றி கண்டது. மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் 13-ல் காங்கிரஸ் கூட்டணி வென்றது.
இந்த முறை தேசிய அளவிலான கூட்டணியைவிட மாநில அளவில் ஏற்படும் கூட்டணிகளே முக்கியப் பங்கு வகிக்கப்போகின்றன. தேசிய அளவில் ஒரு கட்சியின் வாக்கு அப்படியே இன்னொரு கட்சிக்கு முழுதாக மாற்றப்படும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி பாஜகவைக் கலக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக்கொள்ள பிரியங்கா காந்தியைக் களத்தில் இறக்கியிருக்கிறது. தேர்தல் நெருங்க பாஜக அல்லாத கட்சிகளிடையே இன்னொரு அணி சேர்க்கையும், புதிய உத்திகளும் உருவாகும் சாத்தியமும் உள்ளது. மாநிலக் கட்சிகள் உள்ளூர் செல்வாக்கைக் கணக்கில் கொண்டே செயல்படுகின்றன. இதை காங்கிரஸ் தலைமை அங்கீகரித்துச் செயல்பட்டால், எல்லா மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்துவிடும்.
பிஹார், ஜார்க்கண்ட் இரண்டிலும் மாநிலக் கட்சிகள் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தெளிவாக இருப்பதால் கூட்டணி முன்கூட்டியே ஏற்பட்டிருக்கிறது. பாஜக அல்லாத கட்சிகள் தங்களுக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகளை அமைப்பதால் பலன் ஏதும் இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டணிகளில் அதிகத் தொகுதிகளில் நின்று இறுதியில் ஓரிரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறுவதற்குப் பதிலாக, அவரவர் வாக்கு வங்கிக்கு ஏற்ப ஒரே அணியில் தொகுதிகளைக் குறைத்துக்கொண்டு போட்டியிட்டால் வெற்றிகளைக் குவிக்கலாம். இல்லாவிட்டால் பிரதமர் மோடி குறிப்பிட்டதுபோல், எதிர்க்கட்சிகளின் கூட்டணி மகா கலப்படக் கூட்டணியாகத்தான் மக்களால் பார்க்கப்படும்!