பாஜ ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஏழு திட்டங்களின் ஊழல் குறித்த அறிக்கையை சிஏஜி அலுவலகம் வெளியிட்டது. இது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது மோடி அரசு. தலைமை கணக்கு தணிக்கையாளர், இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவு கணக்கை சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். கடந்த 9 ஆண்டு கால ஒன்றிய பாஜ ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஏழு திட்டங்கள் குறித்த அறிக்கையை சிஏஜி அலுவலகம் ஆதாரத்துடன் வெளியிட்டது.
அதாவது பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதை கட்டுமானத் திட்டம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலித்தல், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டு திட்டம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்ஏஎல் விமான இன்ஜின் வடிவமைப்பு திட்டம் ஆகிய 7 திட்டங்களாகும். பாரத் மாலா திட்டம் என்பது நாடு முழுவதும் உள்ள சாலைகள், நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகளை இணைக்கும் திட்டமாகும். முதல்கட்டமாக 34,800 கி.மீ. சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ரூ.5,35,000 கோடி நிதி ஒதுக்கியது (அதாவது, ஒரு கி.மீ. சாலைக்கு ரூ.15.37 கோடி).
ஆனால் ஒரு கி.மீ. சாலைக்கு ரூ.32.17 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. துவாரகா விரைவுப் பாதை என்பது நாட்டின் முதல் 8 வழி விரைவுச் சாலைத் திட்டம். அதற்கான திட்டச் செலவு ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.18 கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டச் செலவு ஒரு கி.மீ.,க்கு ரூ.250 கோடி உயர்ந்துள்ளது என சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. இதுபோன்று தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் ரூ.132 கோடி வசூல் மற்றும் அயோத்தியா மேம்பாட்டு திட்டம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்டம், எச்ஏஎல் விமான இன்ஜின் வடிவமைப்புத் திட்டத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல் அறிக்கையை வெளியிட்ட சிஏஜி அதிகாரிகள் 3 பேரை பாஜ அரசு இடமாற்றம் செய்துள்ளது. இதில் சிஏஜி உள்கட்டமைப்பு பிரிவின் முதன்மை இயக்குநர் அதூவா சின்கா, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அக்கவுன்ட்டன்ட் ஜெனரலாக மாற்றப்பட்டுள்ளார். சிஏஜியின் மத்திய செலவினங்கள் பிரிவின் தலைமை இயக்குநராக சூர்யகாந்த் சிர்ஷாத், தற்போது சிஏஜியில் காலியாக இருந்த சட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். சிஏஜி வடமத்திய மண்டல இயக்குநராக இருந்த அசோக் சின்ஹா, சிஏஜி அலுவல் மொழி இயக்குநராக டம்மி இலாகாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊழலை அம்பலப்படுத்திய சிஏஜி அதிகாரிகளை இடமாற்றம் செய்வதா என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உடனடியாக இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மோடி ஆட்சியின் இறுதி காலக்கட்டத்தில் நேர்மையான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் போன்ற அடக்குமுறைகள் கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது.
Danger: Repression by BJP government