வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்படும் பணத்தில், ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக கணிசமாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. கணக்கில் வராத பணம் பெரும்பாலும் மேற்குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளாகவே பதுக்கப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசு விளக்கம் அளித்தது.
இதன் தொடர்ச்சியாக, மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனிடையே, ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அதனை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி அண்மையில் நிறுத்தியது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் விரைவில் மதிப்பு நீக்கம் செய்யப்படும் என்ற கருத்து மக்களிடையே காணப்படுகிறது. இதனால், அந்த நோட்டுகளை வாங்குவதற்கு வியாபாரிகளும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அண்மைக்காலமாக வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்படும் பணத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2017-18-ம் நிதியாண்டில் வருமான வரித்துறை கைப்பற்றிய பணத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் 68 சதவீதம் இருந்துள்ளது.
ஆனால், நடப்பு நிதியாண்டில் கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை 43 சதவீதமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. ரூ.2 ஆயிரம் நோட்டுகள் எப்போது வேண்டுமானாலும் மதிப்பு நீக்கம் செய்யப்படும் என்ற கருத்து நிலவுவதால், கணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் தங்களிடம் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்று மதிப்புள்ள நோட்டுகளாக மாற்றி வருவதையே இது காட்டுகிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.