2016 திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடர்பில் இத்தீர்ப்பு சில கேள்விகளை எழுப்புகிறது.
2016 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்குக் கட்சியின் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆவணப் படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை பதியப்பட்டிருந்தது. சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படிவங்களில் இடம்பெற்றிருந்தது ஜெயலலிதாவின் கைரேகைதானா என்று கேள்வி எழுப்பிய அரவக்குறிச்சி திமுக வேட்பாளரும் மருத்துவருமான சரவணன், அதுகுறித்த மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். ஏ.கே.போஸின் மரணத்தையடுத்து கடந்த ஆண்டில் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த வழக்கு, இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. கட்சி வேட்பாளரை அங்கீகரிக்கும் படிவத்தில் கையெழுத்துதான் இட வேண்டும் என்றும் கைரேகையிட்டது செல்லாது என்றும் கூறியிருக்கும் உயர் நீதிமன்றம், அதனால் வேட்பு மனு செல்லாது என்றும் அந்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஜெயலலிதாவின் கைரேகை குறித்து சந்தேகம் எழுப்பிய சரவணன் தனது வழக்கைத் திரும்பப்பெற்றுக்கொள்வதாகக் கூறிய நிலையில்தான் இந்தத் தீர்ப்பும் வந்திருக்கிறது. இந்த வழக்கு, விசாரணையில் இருப்பதைக் காரணம் காட்டியே திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வழக்கில், இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதோடு வழக்குக்கும் இடைத்தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது உயர் நீதிமன்றம்.
திட்டவட்டமாகத் தேர்தல் ஆணையம் மீது விழுந்திருக்கும் அடிதான் இந்தத் தீர்ப்பு. ‘வேட்பு மனு தாக்கலில் கையெழுத்துதான் பெற வேண்டும்’ என்று விதி இருக்கும்போது எப்படி கைரேகையை ஒப்புக்கொண்டார் தேர்தல் அலுவலர்? இந்த விதிமீறலுக்கு ஆணையம் வைத்திருக்கும் பதில் என்ன? சம்பந்தப்பட்ட அலுவலர் மீதான நடவடிக்கை என்ன? ‘இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்று எந்த உத்தரவும் இடவில்லை’ என்று நீதிமன்றம் சொல்லும் நிலையில், ஏன் தேர்தல் அறிவிப்பை அங்கே வெளியிடவில்லை தேர்தல் ஆணையம்? முன்னெப்போதும் இல்லாத வகையில், தேர்தல் அறிவிப்பு தொடங்கி சின்ன ஒதுக்கீடு வரை ஆளுங்கட்சிக்கு சார்பாகத் தேர்தல் ஆணையம் நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருவதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை 133 கோடி மக்களின் நம்பிக்கையோடு தொடர்புடையது என்பதை அது மறந்துவிடக் கூடாது. உடனடியாக, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான தேர்தலை அறிவிக்க வேண்டும். எல்லோர்க்கும் பொதுவான இடத்தில் அது இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.