திமுக தலைவராகப் பொறுப்பேற்றதன் அரை நூற்றாண்டைத் தொட்டிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், தாங்கள் தொடங்கி நடத்திய கட்சியின் தலைவர்கள் அல்லது ஒரு கட்சியை உடைத்துக்கொண்டு தலைவராக வந்தவர்கள். விதிவிலக்கான சிலரில், திராவிடர் கழகம் என்ற தேர்தல் அரசியல் சாராத இயக்கத்திலிருந்து பிரிந்து, அண்ணா தொடங்கிய திமுகவில் தொண்டராக, செயல்வீரராக, கட்சியின் முன்னணித் தளகர்த்தர்களில் ஒருவராக என்று ஒவ்வொரு நிலையிலும் உயர்ந்து கட்சித் தலைவர் நிலையை அடைந்தவர் கருணாநிதி.
ஒரு தலைவர் இப்படி நீண்ட காலம் கட்சியின் ஆட்சியின் பொறுப்பில் தொடர்வது – அவர் ஜனநாயகரீதியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டாலும் – எந்த அளவுக்கு ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்ற கேள்வி முக்கியமானது. தலைமை தொடங்கி கிளை வரை குடும்ப – வாரிசு அரசியல் இன்றைய திமுகவைச் சூழ்ந்திருப்பதும் கருணாநிதியின் தலைமையில் அவர் எதிர்கொண்ட முக்கியமான விமர்சனம். எனினும், திமுகவையோ, கருணாநிதியையோ மட்டும் இந்த விஷயத்தில் தனித்துக் குற்றம்சாட்ட முடியாது; இந்தியாவின் பெரும்பான்மைக் கட்சிகள் இன்று இப்பிரச்சினையை எதிர்கொள்கின்றன என்பதையும் இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவில் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்தும், விளிம்புநிலையினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும், எல்லா சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியாகத் திமுகவைத் தன்னுடைய காலகட்டத்தில் வளர்த்தெடுத்த கருணாநிதி முன்னதாகக் குறிப்பிட்ட விமர்சனங்களையும் கணக்கில் கொண்டு கட்சியை வளர்த்தெடுத்திருந்தால், மேலும் சிறப்பான தலைமையாக அவருடையது இருந்திருக்கும்.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, மிகச் சவாலான ஒரு காலகட்டத்திலேயே திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றார் கருணாநிதி. “கட்சி உடைந்துவிடுமோ என்று கலங்கினேன்” என்று பெரியார் குறிப்பிடும் வார்த்தைகளின் வழியே கருணாநிதி ஏற்றுக்கொண்ட பதவி எவ்வளவு கடினமானது என்பதை நாம் உணரலாம். இரு முறை பெரும் உடைவுகளைச் சந்தித்தது திமுக. ஆனால், உடைவுகள் எதுவும் திமுகவைச் சிதறடித்துவிடவில்லை. மாறாக, எந்த திராவிட இயக்கத்திலிருந்து அது உருவாகிவந்ததோ அதன் நீட்சிக்குள் தமிழக அரசியல் உள்ளடங்கிவிடும் நிலையில், திமுக – அதிமுக என்று இரு துருவ அரசியலுக்கு வித்திட்டது. நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் கட்சி கடுமையான அடக்குமுறையைச் சந்தித்தபோதும் சவால்களுக்குத் துணிச்சலாக முகங்கொடுத்தார் கருணாநிதி.
ஆட்சியிலிருந்தபோது நேரடியாக மேற்கொண்ட மாற்றங்களுக்கு இணையாக எதிர்க்கட்சியாக இருந்தபோது துடிப்பான செயல்பாடுகளின் வழியே தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுத்து மக்கள் நலனுக்கு உழைத்தார். தமிழ்நாட்டின் தனித்துவமாகக் கருதப்படும் சமூகநீதி – சமூகநலத் திட்டங்கள் பலவற்றிலும் திமுக, அதிமுக இரண்டின் பங்களிப்பையும் பார்க்க முடிவதற்குப் பின் கருணாநிதியின் தாக்கம் இருக்கிறது. மாநில உரிமைக்கான உறுதியான குரலாக இருந்ததோடு இந்தியாவின் மத்திய ஆட்சியைக் கூட்டணி யுகத்துக்குத் திருப்பும் வண்டியோட்டிகளில் ஒருவராகவும் அவர் பங்கு இருந்திருக்கிறது.
இந்த 50 ஆண்டுகள் நெடுகிலும் தமிழக அரசியலின் மைய அச்சில் இன்னொரு பகுதியாக எவர் இருந்தாலும், ஒரு பகுதியாக கருணாநிதி இருந்திருக்கிறார். தமிழ்நாட்டு வரலாற்றின் பல திருப்பங்களில் அவர் பங்களித்திருக்கிறார். குறைகள், தவறுகள், சாதனைகள், விமர்சனங்கள் எல்லாவற்றையும் கடந்து, கட்சியைத் தாண்டி தமிழ்நாட்டு மக்கள் அவருடைய பணிக்கு நன்றி கூறும் தருணம் இது. நினைவுகூரப்படும் பயணம், வாழீ நீவீர்!