இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்.
பயணத்தின்போது, ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை அமைதியாகவும் வளமாகவும் உருவெடுப்பதையே இந்தியா விரும்புவதாக அவர் குறிப்பிட்டதை இலங்கையில் அனைத்துத் தரப்பாருமே வரவேற்றுள்ளனர். வடக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய பகுதிகளுக்குச் சென்று அங்கு இந்திய ஆதரவுத் திட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன் அப்பகுதி மக்களிடம் உரையாடியதன் மூலம் அவர்களுக்கும் தமது ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கிறார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக ஒப்புக்கொண்டபடி இந்தியா செயல்படும் என்பதைக் காட்ட ரயில் பாதைத் திட்டம், வீடமைப்பு திட்டம் போன்றவற்றைத் திறந்துவைத்துப் பேசியிருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும் கவுரவமாகவும் சம உரிமைகளுடன் வாழ அந்நாட்டின் 13-வது திருத்தம் மட்டும் போதாது, மேலும் அதிகமான நிர்வாக நடவடிக்கைகளை இலங்கை அரசு அதற்காக எடுக்க வேண்டும் என்பதை மோடி வலியுறுத்தியிருக்கிறார்.
இலங்கையின் வடக்குப் பகுதிக்கான ரயில் பாதை மறுநிர்மாணம், காங்கேசன் துறைமுக வளர்ச்சிப் பணி, சம்பூரில் மின்சார நிலையம் நிறுவும் பணி, வீடிழந்த தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் போன்றவை இலங்கை அரசின் ஒப்புதல்கள் கிடைக்கத் தாமதமானது உட்பட பல காரணங்களால் திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்தியாவின் வளர்ச்சித் திட்ட உதவிகள் குறித்துப் பல ஐயங்கள் எழுந்தன. இந்திய அதிகார வர்க்கத்தின் திறமைக் குறைவும், ஆட்சியாளர்கள் அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பும் அக்கறையும் இல்லாமல் போனதும்தான் இதற்கெல்லாம் காரணம். திட்டங்களைச் சரியாக நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, இலங்கையில் சீன முதலீடு அதிகமாவது குறித்துப் புலம்பி ஒரு பயனும் இல்லை.
பொதுவாக இலங்கைத் தலைவர்களுடன் இந்தியத் தலைவர்கள் பேசும்போதெல்லாம் பெரிய அண்ணன் தோரணையைக் காட்டாமல் விடுவதில்லை. ராணுவரீதியாக உங்களைவிடப் பெரிய நாடு நாங்கள், எங்களுடைய தயவு உங்களுக்கு அவசியம் என்ற ரீதியில் எதையாவது சொல்லிவைப்பது வழக்கம். இம்முறை அவ்வாறான பேச்சுகள் ஏதுமில்லாதது வரவேற்கத் தக்கது.
இந்தியா மீது இலங்கை அரசியல் கட்சிகளிடையேயும் செய்தி ஊடகங்களிலும் இன்னும் சந்தேகம் நிலவுகிறது. தன்னுடைய ராணுவ நோக்கத்தில் மட்டுமே இந்தியா அக்கறை காட்டுகிறது என்ற கோபம் இலங்கையர்களுக்கு இருக்கிறது. எனவே அதற்குத் தூபம் போடும் வகையில் எதையும் பேசாமல், புதிய இலங்கைத் தலைவர்கள் இந்தியாவை மேலும் புரிந்துகொள்ள அவகாசம் அளித்திருக்கிறார் மோடி.
இந்திய-இலங்கை உறவில் மோடியின் பயணம் சற்றுப் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பக்கத்து நாடாக மட்டுமில்லாமல் நல்லதொரு நட்பு நாடாகவும் இலங்கை திகழ இந்திய அரசு நிதானமாகத்தான் செயல்பட்டாக வேண்டும். தமிழர்களுடைய நலனில் இலங்கை அரசு மேலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை நாசூக்காக உணர்த்தியிருக்கும் மோடி, அதற்குத் தேவைப்படும் உதவிகளையும் தாராளமாகச் செய்திட வேண்டும். அதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் மிகப் பெரிய ஜனநாயகப் பண்புள்ள நாடு என்ற புகழ் இந்தியாவுக்கு நிலைக்கும்.
-தி இந்து