சென்னை: “தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்வி வைரஸ் (HMPV) தொற்று சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இருவருமே நலமுடன் இருக்கிறார்கள். எனவே இந்த வைரஸ் தானாகவே சரியாக கூடியது, யாரும் பயப்படத் தேவையில்லை. எனவே இந்த வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், ஹெச்எம்பி வைரஸ் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் இன்று (ஜன.7) நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “ஹெச்எம்பிவி என்று சொல்லக்கூடிய வைரஸ் பற்றிய செய்தி தொடங்கியவுடனேயே நாமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறோம். இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்தவிதமான அறிவுறுத்தல்களும் செய்யப்படவில்லை. அதேபோல் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக இதுபோல் பாதிப்புகள் ஏற்படும்போது குறிப்பாக மாநிலங்களில் உள்ள சுகாதாரத் துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்புவார்கள். அதுவும் கூட இதுவரை இல்லை.