முக்கிய வங்கிகள் கொடுத்த பல்லாயிரக்கணக்கான கோடி கடனை வாராக்கடனாக அறிவித்து அதனை தள்ளுபடி செய்துள்ளது தொடர்பாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
நாட்டின் முக்கிய வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்குப் பறக்கும் தொழிலதிபர்களைப் பற்றி நாம் அறிகிறோம். அதே நேரத்தில் முக்கிய வங்கிகள் கொடுத்த பல்லாயிரக்கணக்கான கோடி கடனை வாராக்கடனாக அறிவித்து அதனை தள்ளுபடி செய்து வரும் புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தாண்டு மார்ச் 31 வரை அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கி வாராக்கடனாக ரூபாய் 76,000 கோடியை தள்ளுபடி செய்து இருப்பதாக ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
980 பேர் 100 கோடிக்கு மேல் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று அவற்றைக் கட்டத் தவறியதால், வாராக்கடனாக அறிவித்து வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி பட்டியலிட்டு இருக்கிறது.
980 கணக்குகளில் 220 வங்கி கணக்குகள் பாரத ஸ்டேட் வங்கிக் கணக்குகளாகும். 500 கோடிக்குமேல் கடன் பெற்ற 71 வங்கி கணக்குகளின் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.
எஸ்பிஐ வங்கியில் 33 பேர் பெற்ற 500 கோடிக்கு அதிகமான வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, 100 கோடிக்கு மேல் பெற்ற 94 பேரின் கடன்களையும், 500 கோடிக்கு மேல் வாங்கிய 12 பேரின் வாராக்கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
இதேபோல ஐடிபிஐ வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் கோடிக் காணக்கில் வாராக்கடனை தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.