கொரோனா 3-வது அலை குறித்த அச்சம் இந்தியாவில் உள்ள அனைவருக்குமே உள்ளது. கொரோனாவின் தாக்கம் இன்னமும் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் குறைவதாக இல்லை. அதிகபட்சமாக கேரளாவில் கொரோனாவின் கோரதாண்டவம் தலை விரித்தாடுகிறது. கேரளாவின் பாதிப்புகள் தமிழகத்தையும் தாக்குமோ என்ற கவலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் இங்கும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்புகள், தொழில் அடிப்படையில் கேரளாவும், தமிழகமும் சகோதர பாசத்தோடு பின்னி, பிணைந்து இருக்கும் நிலையில், அங்கிருக்கும் தொற்று தமிழகத்திற்குள் வரும் ஆபத்துகள் மிக மிக அதிகம்.
குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து ரயில்களில் வருவோர், செல்வோர் கொரோனாவை இங்கு கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களான கோவை, குமரி, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சோதனைச்சாவடிகளில் காவல்துறை, மருத்துவத்துறை, வருவாய்துறையினர் முகாமிட்டு சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருவோர் 2 தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா 3வது அலை வருமோ என்கிற அச்சம் தொடர்ந்து நிலவும் நிலையில், அரசு அதற்குள் முக்கிய முடிவுகளோடு களமிறங்கி விட்டது.
ஆடி மாத நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கூடாத வகையில் முக்கிய திருக்கோயில்கள் மூடப்பட்டுள்ளன. மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒரு வாரத்திற்கு கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசிகளை போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி 66 சதவீதம் பேருக்கு உருவாகி இருப்பது நமக்கெல்லாம் ஆறுதல். இருப்பினும் 3வது அலையின் வீரியத்தை கண்ட பின்னரே, நோயின் தாக்கத்தை முழுமையாக உணர முடியும். 3வது அலை குழந்தைகளை தாக்கலாம் என்பதால், அவர்களுக்காக மருத்துவமனைகளில் 25 சதவீதம் படுக்கைகளை தமிழக அரசு தயார் செய்து வருகிறது.
நம் அண்டை மாநிலமான கேரள மக்கள் கொரோனாவால் தொடர்ந்து துன்புற்று வரும் நிலையில், நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் நீட்டிக்கப்படுவது நமது செயல்பாடு களில்தான் உள்ளது. முக கவசம், சமூக இடைவெளி தொடர்ந்தால் மட்டுமே கொரோனா 3ம் அலையை தமிழகம் தடுக்க முடியும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் மீண்டும் முழு ஊரடங்கை நாம் எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை. கொரோனா தொற்று அதிகரித்து வரும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில், 10 சதவீதத்திற்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ேநாய் தடுப்பு நடவடிக்கைகளும், தடுப்பூசியுமே நம்மை தற்காத்து கொள்ளும் வழிமுறைகளாகும்.