தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நிலைக் கண்காணிப்புக் குழுக்களாலும் பறக்கும் படையினராலும் கணக்கில் வராத பெருந்தொகையிலான பணமும் பொருட்களும் தொடர்ந்து கைப்பற்றப்பட்டுவருகின்றன. பணம் கொடுத்து மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற அரசியல் கட்சிகளின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடும் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதேசமயத்தில், வருமான வரித் துறையினரின் சோதனைகளும் பல இடங்களில் நடப்பதைப் பார்க்க முடிகிறது. பணம் கைப்பற்றப்படுகிறது என்கிற அளவில் அதுவும் பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது. ஆனால், இதுவரை இப்படி நடத்தப்பட்டிருக்கும் சோதனைகளில் ஆகப் பெரும்பாலானவை எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவையாகவே இருப்பதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆளுங்கட்சியினரிடம் ஏன் இப்படி சோதனைகள் நடத்தப்படவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன. உண்மையில், கைப்பற்றப்பட்ட பணமும் பொருட்களும் தேர்தலில் செலவழிக்கும் நோக்கத்துக்காக எனும்போது அந்தக் கேள்வியை எழுப்பும் தார்மிகத்தை அக்கட்சிகள் இழந்துவிடுகின்றன. எனினும், தேர்தல் ஆணையமும் அரசுத் துறையும் பாரபட்சத்துடன்தான் நடந்துகொள்கிறதா என்ற கேள்வி பொதுமக்களிடமும்கூட எழுந்திருக்கிறது. அப்படியென்றால், ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறாமல்தான் வாக்கு சேகரித்துவருகிறார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்பது அது நடுநிலையோடு செயல்படுவதற்காகத்தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பேதங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்படும்போதுதான் தேர்தல் ஜனநாயகத்துக்கான நோக்கம் நிறைவேறும். தேர்தல் ஆணையப் பணிகளில் பெரும்பாலும் வருவாய்த் துறை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுவருகிறார்கள். பொதுவாக, தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் அதிகாரிகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்குப் பணிமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அப்படியான பணியிட மாற்றங்கள் எதுவும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. பல தொகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள் என்ற குரல்கள் ஒலிக்கின்றன. ஆளுங்கட்சியினருடன் சேர்ந்து ஒரே மேடையில் நின்று அரசு விழாக்களை நடத்திய அதிகாரிகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி புறந்தள்ளிவிடக்கூடியதும் அல்ல.
அரசு அலுவலர்கள் மனச்சாய்வு இல்லாமல் தங்களது பணியைச் செய்யும் சூழல் உருவாக வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம்தான் அதற்கேற்ப கறாரான செயல்பாட்டில் இறங்க வேண்டும். தேர்தல் ஆணையம் எடுக்கும் கண்டிப்பான, பாரபட்சமற்ற நடவடிக்கைகள்தான் அத்தகைய சூழலை அரசு அலுவலர்கள் மத்தியில் உண்டாக்கும். மக்களிடம் தேர்தல் மீது மதிப்பும், நல்லெண்ணமும், உறுதியான ஜனநாயகப் பற்றும் நீடிக்க வேண்டும் என்றால், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமமானப் போட்டிச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.