பொருளாதாரச் சரிவு நின்று, மீண்டும் வளர்ச்சி ஏற்பட மேலும் காலம் பிடிக்கும்; மிகத் தீவிரமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாகத் தேவை என்பதையே இந்தியாவின் முக்கியமான எட்டு உற்பத்தித் துறைகளின் தரவுகள் உணர்த்துகின்றன.
மின்னுற்பத்தி, உருக்கு, நிலக்கரி, சிமென்ட், உரங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை நிலவாயு ஆகிய முக்கிய எட்டுத் துறைகளில் உற்பத்தியானது செப்டம்பர் மாதம் 5.2% அளவுக்குச் சுருங்கியது. கடந்த 14 ஆண்டுகளில் இப்படி நேரிட்டதில்லை.
எட்டுத் துறைகளில் ஏழு துறைகள் உற்பத்திச் சரிவைக் கண்டுள்ளன. நிலக்கரித் துறையில் 20% அளவுக்கு உற்பத்தி குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதம் இத்துறைகளில் 4.3% வளர்ச்சி இருந்தது. கடந்த ஆகஸ்டில் இது 0.5% அளவுக்கே சுருங்கியிருந்தது.
இதனால், இரண்டாவது காலாண்டிலும் முழு நிதியாண்டிலும் ஜிடிபி மேலும் குறையும் என்பதையே இவை உணர்த்துகின்றன. செப்டம்பர் மாதத்தில் சில உற்பத்தித் துறைகளில் புத்துயிர்ப்பு இருந்தாலும் பெரும்பாலான துறைகளில் மந்தநிலையே தொடர்கிறது. நுகர்வில் ஏற்பட்ட வீழ்ச்சி, எல்லா துறைகளையும் பாதித்துவருகிறது என்பதையே இது காட்டுகிறது.
இந்தியப் பொருளாதார ஆய்வுக்கான மையம் (சிஎம்ஐஇ) திரட்டிய தரவுகளின்படி, வேலைவாய்ப்பற்றவர் எண்ணிக்கை அக்டோபரில் 8.5% ஆக உயர்ந்திருக்கிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவாகும். பொருளாதாரம் வளர்ச்சி அடையாவிட்டால், வேலைவாய்ப்பும் நுகர்வும் மேலும் குறையும். இந்த ஆண்டு பிப்ரவரி தொடங்கி இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வட்டிவீதத்தைக் குறைத்துக்கொண்டே வந்தும் பொருளாதார மீட்சி ஏற்படவில்லை.
நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளையொட்டி வங்கித் துறை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குப் புதிதாகக் கடன் வழங்கியிருந்தும், மொத்தக் கடன் வழங்கல் அளவில் 0.2% வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. மோட்டார் வாகனம் மற்றும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றின் விற்பனை அதிகரித்தது.
இது தொடருமா என்று பார்க்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க தன்னுடைய நிதியிலிருந்து மேலும் செலவிட முடியாத இக்கட்டான நிலையில் மத்திய அரசு இருக்கிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய கடமை அதற்கு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடனான வணிகத்தில் நமக்குள்ள பின்னடைவுச் சூழலும் நம்முடைய நிலையை மேலும் சங்கடமாக்குகின்றன. இந்திய அரசு இந்நிலையிலேனும் எல்லாத் தரப்புகளுடனும் இதுகுறித்துக் கலந்து பேச வேண்டும். துறைவாரியான சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.