தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை ஒரு நாள் தாமதமாக்கினாலும்கூட அதை ‘வாராக் கடன்’ என்று அறிவித்து, 180 நாட்களுக்குள் தீர்க்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி 12 அன்று வெளியிட்ட சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிறுவனங்களும் வங்கிகளும் தற்காலிகமாக நிம்மதி அடையலாம். ஆனால், நீண்டகால நோக்கில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதையும் கணக்கில் கொண்டாக வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் விதிகளைப் புறந்தள்ளும் விதத்தில், இதே போன்ற வழக்குகள் அனைத்தையும் தன்னுடைய விசாரணைக்குத் தொகுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது இந்திய திவால் சட்டத்துக்கே பெரிய சவால். இதனால் முதலீட்டாளர்களுக்கு இந்திய திவால் சட்டத்தின் மீது நம்பிக்கை குறையும். இந்த வழக்கில் அடுத்த விசாரணையை நவம்பர் மாதத்துக்குத் தள்ளிவைத்திருப்பதும் தவறான எண்ணத்தை விதைத்துவிடும். வாராக் கடன்களாகக் கோடிக்கணக்கில் சேர்ந்துவிட்ட தொகையை வசூலிப்பதற்காகத்தான் திவால் சட்டம் இயற்றப்பட்டது. இப்போது அந்த நடைமுறையில் நீதிமன்றம் தலையிடுவது அதன் நோக்கத்தைப் பாழ்படுத்திவிடும்.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத மின்உற்பத்தி நிறுவனங்கள், சர்க்கரை, ஜவுளி ஆலைகள் போன்றவை இந்தத் தடை உத்தரவை வரவேற்கலாம். ‘வாராக் கடன்’ என்று அறிவிப்பதை மேலும் சில காலத்துக்குத் தள்ளிப்போட முடிவதால் வங்கிகளும் மகிழ்ச்சி அடையும். ஆனால், இது நிரந்தர நிம்மதியாக இருக்க முடியாது. மின்உற்பத்தி நிறுவனங்களின் அடித்தளக் கட்டமைப்புகள் சரியாக இல்லை. நிலக்கரி உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைப்பதில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாதவரை, நிறுவனங்களின் சொத்துக்களை ஏலத்தில் விற்றாலும் நல்ல விலை கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். திவாலாகிப்போகும் நிறுவனங்களின் சொத்துகளை ஏலத்தில் விற்கக் குறைந்த கால அவகாசமே தரப்படுவதால் அதிக விலைக்கு அல்லது லாபத்துக்கு விற்க முடிவதில்லை. கடனாகக் கொடுத்த தொகையில் அதிகபட்சம் 10% மட்டும்தான் ஏல விற்பனையில் கிடைக்கும். இதனால் கடனும் அடையாது, உற்பத்தியும் பெருகாது.
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தக் கால அவகாசத்தை மத்திய அரசு பயன்படுத்தி, வாராக் கடன் என்று அறிவிப்பது, திவால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றில் உள்ள நடைமுறைப் பின்னடைவுகளைப் பரிசீலித்து மாற்றம் செய்ய வேண்டும். வாராக் கடன்களை வசூலிப்பதில் அவசர நடவடிக்கைகளைக் கைவிட்டு விவேகமான, லாபகரமான வழிமுறைகளை அரசு கையாள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் அடிக்கடி தலையிடுவது அவசியமா என்று உச்ச நீதிமன்றமும் பரிசீலிக்க வேண்டும்!