நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உறுதி செய்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு காஷ்மீர் என்ற மாகாணம் எந்த நாட்டுடனும் சேராமல் இருந்தது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த காஷ்மீர் மாகாணத்தை மஹாராஜா ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார்.
காஷ்மீர் மாகாணம் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதை அந்த மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்ற உரிமை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் காஷ்மீரை அபகரிக்க பாகிஸ்தான் முயன்ற போது இந்தியாவிடம் பாதுகாப்புக் கோரிய மஹாராஜா ஹரிசிங், அதற்காக பல நிபந்தனைகளை விதித்தார்.
அவரது நிபந்தனைகளின் அடிப்படையில்தான் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்து காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை இழக்கும் வேலையை மத்திய அரசு தற்போது செய்துள்ளது.