ஜார்க்கண்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்தியிருக்கின்றன. மக்களவைத் தேர்தலில் ஏழு மாதங்களுக்கு முன்பு பாஜக 51.6% வாக்குகள் வாங்கியதன் பின்னணியில் இந்தத் தோல்வியை வைத்துப் பார்க்கும்போது குறிப்பிட்ட ஒரு போக்கு உருவாகிவருவதை நாம் உணரலாம். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இந்த ஒரு ஆண்டுக்குள் நடந்த தேர்தல்களின் முடிவை வைத்துப் பார்க்கும்போது சட்டமன்றத் தேர்தல்களைவிட மக்களவைத் தேர்தல்களில் பாஜக அதிகம் வென்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.
மகாராஷ்டிரத்தைப் போலவே பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டன. மக்களவைத் தேர்தல் முடிந்ததும் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் ஒன்றியம் கட்சியானது, கூட்டணியிலிருந்து விலகியது பாஜகவின் தோல்விக்கு ஒரு காரணம். கூட்டணிக் கட்சிகளிடம் பாஜக வளைந்துகொடுக்காத தன்மை அதீத தன்னம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலின்போது தேசிய நலனைச் சுமந்து செல்லும் ஒரே கட்சியாகத் தன்னை பாஜக காட்டிக்கொள்கிறது. இதனால், உள்ளூர் சமூகங்களின் பிரச்சினைகள் ஓரங்கட்டப்படுகின்றன. ஆனால், தேசியத்தின் பேரிலான முழக்கங்கள் மாநிலத் தேர்தலில் எடுபடுவதில்லை. வாழ்வாதாரம், இனக்குழுக்களின் பிரச்சினைகள் போன்றவையே வாக்காளர்களிடம் செல்வாக்கு செலுத்துகின்றன.
ஜார்க்கண்டில், தற்போது முதல்வர் பதவியிலிருந்து வெளியேறியிருக்கும் ரகுவர் தாஸ், அங்குள்ள மக்களிடையே மோசமான பெயரைப் பெற்றிருந்ததால் அங்கே பாஜகவின் வீழ்ச்சி ஓரளவுக்குக் கணிக்கக்கூடியதாகவே இருந்தது. நிர்வாகத் திறமையின்மையால் பாஜக ஆட்சி பெற்றிருந்த அவப்பெயரை ஈடுகட்டும் விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கிளப்பப்பட்ட பாகுபாட்டு அரசியல் எடுபடவில்லை. அங்கே பாஜக தோல்வியைத் தழுவியிருக்கிறது.
பூர்வகுடிகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த மாநிலத்தில் பழங்குடியினரல்லாத முதல் முதல்வர் ரகுவர் தாஸ். பழங்குடியினர் மீது பாஜகவுக்கு அவ்வளவாக அக்கறை இல்லை என்று தோன்றும் விதத்தில்தான் அவரது ஆட்சி பார்க்கப்பட்டது. எதிரே காங்கிரஸ் தனித்து நிற்கும் முடிவை எடுக்காமல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவற்றுடனான கூட்டணியில் இணைந்ததும் தன்னுடைய பங்கை ஓரளவுக்குச் சுருக்கிக்கொண்டதும் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான போக்கை உருவாக்கின. எல்லாவற்றுக்கும் மேலாக, நாடாளுமன்றத் தேர்தலை ஒருவிதமாகவும் மாநிலத் தேர்தலை வேறுவிதமாகவுமே வாக்காளர்கள் அணுகுகின்றனர்.
பொதுவாக, மக்களவைத் தேர்தலுக்குப் பின் பெரிதும் சுணங்கிப்போயிருந்த எதிர்க்கட்சிகளுக்கு ஜார்க்கண்ட் வெற்றி, புதிய நம்பிக்கையையும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் உள்ள சாத்தியங்களைக் கண்டறியும் தேவையையும் தரலாம். எனினும், தேசிய அளவில் பாஜகவின் பிரம்மாண்டத் தேர்தல் உத்திகளை வெல்லும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் உத்வேகம் பெற்றுவிட்டதாகச் சொல்லிவிட முடியாது.