மலையாள சினிமாவில் ஒப்பீட்டளவில் மாஸ் மசாலா ஆக்‌ஷன் படங்கள் குறைவு. கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அங்கு அவ்வப்போது சில மாஸ் படங்கல் வெளியானாலும் அவற்றில் எப்போதும் ரசிகர்கள் மனதில் முதன்மையாக இடம்பெறும் படம் என்று ‘லூசிஃபரை’ சொல்லலாம். இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன். தனது ஆதர்ச மோகன்லாலை அதுவரை எந்த இயக்குநரும் காட்டாத மாஸ் அவதாரத்தில் காட்டிருந்தார். மாபெரும் எதிர்பார்ப்புடன் இதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள ‘எல்2: எம்புரான்’ எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
முதல் பாகத்தில் மாநில முதல்வரின் இறப்புக்குப் பிறகு புதிய முதல்வராக பதவியேற்ற அவரது மகன் ஜதின் ராமதாஸ் (டொவினோ தாமஸ்) தன் மீதான அவப்பெயரை களையும் நோக்கில் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறார். இதற்காக அக்கட்சியின் தலைவரான பால்ராஜ் படேல் (அபிமன்யு சிங்) உடன் கைகோர்க்கிறார். இதற்கு முதல்வரின் சகோதரி ப்ரியதர்ஷினி (மஞ்சு வாரியர்) கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் இருக்கிறார்.