ஜம்மு-காஷ்மீரில் தகவல்தொடர்புக்கு விதித்துள்ள தடைகளை முழுமையாக நீக்கியும், கைதுசெய்யப்பட்ட அரசியலாளர்களை விடுவித்தும் அங்கே இயல்புநிலையை மீண்டும் ஏற்படுத்த மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்று ஆகஸ்ட் 2-ல் வெளியிட்ட அறிவிப்பைத் திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், உடனடியாக அங்கே சுற்றுலாப் பொருளாதாரம் மீட்கப்படுவது சாத்தியமற்றது.
ஸ்ரீநகரிலேயே பல இடங்களில் இன்னும் சாலைத் தடைகள் அகற்றப்படவில்லை. காவல் துறையும் ராணுவமும் காவல் காக்கின்றன. தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச் சண்டை நடத்துவதும் தொடர்கிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் எந்த நம்பிக்கையில் திரள முடியும்?
தகவல்தொடர்பு வசதிகள் முழுதாக ஏற்படுத்தப்படவில்லை என்பதற்காக மட்டுமல்ல; அரசியல் சட்டப் பிரிவு 370 அளித்த தனி அந்தஸ்தை நீக்கியதற்காகவும், மாநிலத்தை இரண்டாகப் பிரித்ததற்காகவும், ‘மத்திய ஆட்சிக்குட்பட்ட நேரடிப் பகுதி’ என்று அறிவித்ததற்காகவும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவதுமாகத் திறந்து வைக்கப்படுவதில்லை. பள்ளி, கல்லூரிகளைத் திறந்த பிறகும் மாணவர்கள் இன்னமும் கல்விக்கூடங்களுக்கு வராமல் 80% புறக்கணிப்பு நீடிக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வட்டார வளர்ச்சிப் பேரவைகளுக்கு இம்மாதம் 24 அன்று தேர்தல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது உள்ளூரில் இளம் அரசியல் தலைவர்களை வளர்த்துவிடும் உத்தி என்பதாக அரசியல் நோக்கர்களால் விமர்சிக்கப்படுகிறது. தேர்தல் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், தேர்தல் நடைபெறும் சூழலும் விதமும் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடந்து, மக்களும் அதில் பெருவாரியாகப் பங்கேற்று, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட மாநில அளவிலான அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் எந்தவிதத்திலும் ஈடாக மாட்டார்கள். அவர்களுடைய செல்வாக்கு அவர்களுடைய தொகுதிகளுடன் முடிந்துவிடும்.
காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகளின் தலைவர்களையே வீட்டுச் சிறையில் வைத்து அவமானப்படுத்திவிட்டதால், இனி சமரசம் பேசக்கூட அவர்கள் தயங்கும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணும் வாய்ப்புகள் ஏற்கெனவே குறைவாக இருந்தன. காஷ்மீர் மக்களுடைய ஆதரவைப் பெறவும் அங்கு இயல்புநிலை ஏற்படவும் அரசு இன்னமும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து நீக்கம் நிரந்தரமல்ல என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதை மக்களுடன் விவாதித்துவிட்டு விரைவில் திரும்பப்பெற வேண்டும். துப்பாக்கி முனையில் ஒரு மாநிலத்தை 24 மணி நேரமும் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. காஷ்மீர் விவகாரத்தில் தேவையற்ற அரசியல் சாகசங்களில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது. அது விவகாரத்தை வேறு திசைக்குக் கொண்டுசெல்லக்கூடும்.