பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க ராஜஸ்தானில் 2017-ல் நடந்த கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது நாடு முழுக்க ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியும் அதனால் வாரங்களைக் கடந்தும் நடக்கும் விவாதங்களும் மிகவும் நியாயமானவை. பசுக்களை ஓட்டிச் சென்ற விவசாயி பேலுகானும் அவருடைய மகன்களும் பசு குண்டர்களால் சுற்றி வளைக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்த பேலுகான் பிறகு உயிரிழந்துவிட்டார். இந்தக் காட்சிகள் கேமராக்களில் பதிவாகி, நாடு முழுவதும் பார்க்கப்பட்டன. எனினும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்க அரசுத் தரப்பால் முடியவில்லை என்று கூறி, அவர்களை விடுவித்திருக்கிறது ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்ட நீதிமன்றம்.
பேலுகான் தன்னைத் தாக்கியதாக யார் யாருடைய பெயர்களைக் கூறினாரோ அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது நீதிமன்றம். பேலுகான் கூறிய பெயர்களுக்குப் பதிலாக வேறு ஆறு பேர்களைச் சேர்த்தது காவல் துறை. அந்த ஆறு பேரில் மூவர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ‘இது திட்டமிட்டு, குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது; இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் இவர்கள்தானா என்று சாட்சிகள் அடையாளம் காண, அணிவகுப்பு எதையும் காவல் துறை நடத்தவில்லை’ என்ற குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளுவதற்கு இல்லை.
நம்பத்தக்க வகையில் உரிய காணொலி ஆதாரங்கள் இருந்தால் அவற்றைச் சாட்சியங்களாக ஏற்கலாம் என்று கடந்த ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த ஆண்டு இரண்டு கும்பல் கொலை வழக்குகளில் காணொலி ஆதாரங்கள் சாட்சியங்களாக ஏற்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ஆல்வார் மாவட்ட நீதிமன்றம் காணொலிக் காட்சிகளை ஆதாரமாக ஏற்க மறுத்துவிட்டது. சந்தேகப்படுகிறவர்களை வீதியில் திரளும் கும்பல் அடித்துக் கொல்லும் நிகழ்ச்சிகள், இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துவருகின்றன. பசு கடத்தல், குழந்தைகள் கடத்தல், திருட முயற்சி என்று இதற்குக் காரணங்கள் பல கூறப்பட்டாலும் சிக்கியவர்களைக் காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை மறந்து, சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் துணிச்சலைக் கும்பல்கள் பெற்றுள்ளன. கும்பல்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல் விடுவது, அவர்களை மறைமுகமாக ஊக்குவிக்க வழிசெய்கிறது.
பேலுகான் வழக்கில் பசு குண்டர்களுக்கு ஆதரவாகக் காவல் துறை நடந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. தீர்ப்பு வெளிவந்து 15 நாட்கள் ஆனாலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. பேலுகான் வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் கூறியிருக்கிறார். மேல்முறையீடு மட்டும் போதாது, கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவரும் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையானது கும்பல் வன்முறையில் ஈடுபட முனைவோருக்குக் கடுமையான எச்சரிக்கையாக அமைய வேண்டும்.