இறந்த தலைவர்களை பற்றி யாரும் விமர்சனம் செய்வது இல்லை. அந்த விதியை மீறி, முன்னாள் பிரதமர் ராஜிவ் மீது திடீரென ஊழல்வாதி என்று விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி. அதுவும் ரபேல் போர் விமான ஒப்பந்த பேரத்தில் தர்க்கரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்தியபோதெல்லாம், பதில் சொல்ல முடியாமல் அமைதிக் காத்த மோடி, மக்களவை தேர்தலில் 5 கட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில், திடீரென ராஜிவை வம்புக்கு இழுத்துள்ளார்.
போபர்ஸ் பீரங்கி பேரத்தில், ராஜிவ் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. அவர் ஊழல் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை. போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பின்னர் நடந்த தேர்தலிலும் கூட இப்பிரச்னை எதிரொலிக்கவில்லை. ஆனால், 5 கட்ட தேர்தல் முடிந்த பின்னர் திடீரென மோடிக்கு, போபர்ஸ் ஞாபகம் வந்ததுதான் ஏனென்னு தெரியவில்லை.
அடுத்ததாக ஐ.என்.எஸ். விராத் போர்க் கப்பலை தங்களுடைய சுற்றுலா வாகனமாக ராஜிவ் குடும்பத்தினர் பயன்படுத்தினர் என்று அவர் இறந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மோடி குற்றச்சாட்டை சுமத்துகிறார். இறந்த ஒரு இளந்தலைவர் மீது, அவர் வாழ்ந்த காலத்திலேயே எடுபடாத ஒரு குற்றச்சாட்டை மோடி முன்வைத்தார்.
ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு வெடிக்காமல், மழையில் நனைந்த பட்டாசாகவே, இப்போது ஐ.என்.எஸ்.விராத்தை இழுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டும் கூட ராஜிவ் வாழ்ந்த காலத்திலேயே கூறப்படாத ஒரு குற்றச்சாட்டு. ‘நான் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் பொருளாதாரம் நிமிர்ந்தது, கருப்பு பணம் வளைந்தது, ஜிஎஸ்டி உயர்ந்தது’ என்று பேசிய மோடி, அதைப்பற்றி ஏன் கூட்டங்களில் வாய் திறக்காமல் சவுகரியமாக குர்தா பாக்கெட்டில் ஒளித்து வைப்பது ஏன் என்று கேட்கின்றனர் காங்கிரசார்.
விமானப்படை விமானங்களிலேயே, பறந்து, பறந்து போகும் மோடி, விமானப்படையை தன் டாக்சியாக பயன்படுத்தினார் என்று சொல்லலாமா என்றும் கேட்கின்றனர் காங்கிரசார். இந்த குற்றச்சாட்டுகளை அனைத்தையும் ராகுலை வெறுப்பேற்றி, அவர் தன்னை திட்ட வேண்டும், அதன் மூலம் மக்களிடம் அனுதாபத்தை பெற வேண்டும் என்று மோடி நினைப்பதாகவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.மோடியின் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றுக்கும் ராகுல் அளித்த பதில், ‘எல்லாம் முடிந்துவிட்டது மோடிஜி. உங்கள் கர்மா காத்திருக்கிறது’ என்பதுதான்.