வயநாடு மக்களவை தொகுதியிலும், ரேபரலி தொகுதியிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். ராகுலுக்கு இரண்டாவது முறையாக வயநாடு மக்கள் வெற்றியை அள்ளிக்கொடுத்தனர். இருந்தும் காங்கிரஸ் கட்சியை உ.பி.யில் பலப்படுத்த நினைக்கும் ராகுல்காந்தி, வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதிக்கு நவ.13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். பாஜ கூட்டணி சார்பில் நவ்யா ஹரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மொகேரியும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மும்முனை போட்டி நிலவுவது மட்டுமின்றி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளதால் வயநாடு இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ராகுலுக்கு வெற்றியை அள்ளிக்கொடுத்த மக்கள் அவரது சகோதரியாக பிரியங்காவுக்கும் ஆதரவளிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி உறுதியாக நம்புகிறது. பிரியங்கா காந்தியை பொறுத்தவரை அவர் களம் இறங்கும் முதல் தேர்தல் இதுவாகும். ஆனால் அவர் கடந்த 35 ஆண்டுகளாக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த தேர்தலில் உத்தரபிரதேசத்திலும், மற்ற மாநிலங்களிலும் அவரது அனல் பறக்கும் பிரசாரம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்தது.
அதுமட்டுமின்றி எளிமையாக மக்களிடம் பழக கூடியவர். மனு தாக்கல் செய்ய வந்த அவர் ராணுவ வீரர் ஒருவர் வேண்டுகோளை ஏற்று அவரது வீட்டுக்கே சென்று அவரது தாயை சந்தித்து பேசினார். இப்படி தனது முதல் சந்திப்பிலேயே வயநாடு மக்களின் மனதில் அவர் இடம் பிடித்துள்ளார். பிரியங்கா காந்திக்கு வயநாடு மக்களிடம் அமோக ஆதரவு இருப்பது ரோட்ஷோ மூலம் தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவரை எதிர்த்து போட்டியிடுபவர்களின் பலத்தையும் அசாதாரணமாக நினைத்துவிட முடியாது. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மொகேரி சுதந்திர போராட்ட தியாகியின் மகன் ஆவார்.
பாஜவை சேர்ந்த நவ்யாவும் இரண்டுமுறை கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர். வயநாடு மக்கள் ராகுல்காந்தி மீது அதிக அன்பு கொண்டிருந்தனர். அதனால் அவருக்கு அடுத்தடுத்து வெற்றியை கொடுத்தனர். அதே ஆதரவை அவரது சகோதரிக்கு காட்டினால் காங்கிரசின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வயநாடு சமீபத்தில் நிலச்சரிவில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒன்றிய பாஜ அரசு நிலச்சரிவு பாதிப்புக்கு பெரியளவில் நிவாரண உதவி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால், வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தாலும் ராகுல்காந்தி அந்த தொகுதி மக்களின் துயரத்தில் நேரில் சென்று பங்கெடுத்துக்கொண்டார்.
அதே போல் பிரியங்கா காந்தியும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த புத்துமலை பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். வயநாடு மக்களின் பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தனது சகோதரியை ஆதரித்து பிரசாரம் செய்த ராகுல்காந்தி, ‘வயநாடு தொகுதியை எனது சகோதரி சொந்த குடும்பத்தை போன்று நன்றாக கவனித்துக்கொள்வார். எனது தாயை எப்படி அன்பாக கவனித்துக்கொள்கிறாரோ அதே போல் வயநாடு மக்களையும் பார்த்துக்கொள்வார்’ என்றார். எனவே வயநாடு மக்கள் பிரியங்காவுக்கு முதல் வெற்றியை பரிசளித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப மனதளவில் தயாராகிவிட்டனர்.