சமீப காலங்களில் லட்சத் தீவுகளில் நடைபெற்று வரும் நிர்வாகரீதியிலான மாற்றங்கள் விமர்சனத்திற்குள்ளாகி தற்போது அது பூதாகரமாக வெளிவரத் தொடங்கியுள்ளது.
சுற்றுலாவிற்கு பெயர் போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் உரிமைகளை பறிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகள் நிா்வாக அதிகாரியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லட்சத்தீவுகளின் நிர்வாகியாக இருந்த தினேஷ்வா் சா்மா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் காலமானாா்.
அதையடுத்து, தாத்ரா-நாகா் ஹவேலி மற்றும் டாமன்-டையு யூனியன் பிரதேசத்தின் நிா்வாகியாக உள்ள பிரஃபுல் கோடா படேல், லட்சத்தீவுகளின் பொறுப்பு நிா்வாகியாக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில் பிரஃபுல் கோடா படேலின் நிர்வாக நடவடிக்கைகள் லட்சத்தீவு மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக உள்ளதாக குரல்கள் எழத் துவங்கியுள்ளன.
என்ன நடக்கிறது லட்சத்தீவுகளில்…?
லட்சத்தீவுகளின் முந்தைய நிலவுரிமை சட்டத்தின்படி லட்சத்தீவை பூர்வீகமாக கொண்ட தாய், தந்தையருக்கு பிறப்பவர் மட்டுமே தீவுகளில் நிலம் வாங்க முடியும் எனும் உத்தரவு தளர்த்தப்பட்டு தற்போது யார் இங்கு வேண்டுமானாலும் இங்கு இடம் வாங்க வழிவகை செய்யும் பிரஃபுல் கோடா படேலின் உத்தரவு அம்மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அவைமட்டுமல்லாது இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்ட லட்சத்தீவுகளின் பிரதான உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றுக்கு தடைவிதிப்பதற்கான முன்னெடுப்புகள், அதனைத் தொடர்ந்து கடலோர மக்களின் குடில்கள் அகற்றம், மதுவிலக்கு நீக்கம், லட்சத்தீவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கலைப்பு என அடுத்தடுத்த நடவடிக்கைகள் யாருக்கானவை எனும் கேள்விகள் எழுகின்றன.
மத்திய அரசின் அறிக்கையின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகாத லட்சத்தீவுகளில் குண்டர் சட்டம் அமல்படுத்தப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
மேலும் மக்கள்தொகையை கட்டுப்படுத்த 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்கும் தகுதி இல்லை எனும் விசித்திரமான சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் இந்த நடவடிக்கைகள் பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் பிருத்விராஜ் தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக எழுதிய பதிவு தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு இந்தப் பிரச்னையின் மீது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அமைதியான குடியேற்றத்தின் வாழ்க்கை முறையை சீர்குலைப்பது வளர்ச்சி எனும் நடவடிக்கையின் வழிமுறையாக எவ்வாறு மாறுகிறது? என கேள்வி எழுப்பியுள்ள அவர் மிகவும் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையை அச்சுறுத்துவது எவ்வாறு நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்? என விமர்சித்துள்ளார்.
லட்சத்தீவுகளின் நிர்வாகியின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி.யும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இளமாரம் கரீம் இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில் லட்சத்தீவுகளின் நிா்வாகி பிரஃபுல் கோடா படேல் லட்சத்தீவுகளின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் சிதைக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பாஜக அரசு மறுப்பு தெரிவித்தாலும் அமலாகும் புதிய நடவடிக்கைகள் லட்சத்தீவுகளுக்கு ஏன் அவசியம் எனும் கேள்வி எழாமல் இல்லை.
அமைதியான நிலப்பரப்பின் மீது வளர்ச்சி எனும் பெயரால் மக்களின் வாழ்வாதாரத்தையும் சூழலையும் குலைப்பது எந்தவகையிலும் பலனைத் தராது என்பதை அரசு உணர வேண்டும்.
லட்சத்தீவுகள் மக்களின் அமைதியான வாழ்வை உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசு அவற்றை பறிக்கும் முயற்சியில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்பதே அனைவரும் வலியுறுத்தும் ஒன்றாக உள்ளது.
யார் இந்த பிரஃபுல் கோடா படேல்?
லட்சத்தீவு என்பது யூனியன் பிரதேசமாகும். எனினும் பிற யூனியன் பிரதேசங்கள் போல இங்கு சட்டப்பேரவை கிடையாது. இங்கு மத்திய அரசின் நேரடி பிரதிநிதியாக நிர்வாகி என்ற பதவியில் இருப்பவர்தான் இந்த குட்டித்தீவை கட்டுப்படுத்துகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் இங்கு நிர்வாகி ஆக இருந்த தினேஷ்வர் சர்மா காலமானதையடுத்து, அந்த பதவியை கவனித்துக்குக் கொள்ளும் கூடுதல் பொறுப்பை, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் தாமன் தையூ நிர்வாகி ஆக இருந்த பிரஃபுல் கோடா படேலிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
ஆனால், பதவிக்கு வந்த நாள் முதல் இவர் எடுக்கும் முடிவுகள், உள்ளூர்வாசிகளின் கோபத்தை தூண்டி வருகிறது. கொரோனா பரவல் நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அவர் பல்வேறு கட்டுபாடுகளை நகரில் விதிப்பதாக இங்குள்ளவர்கள் கருதுகிறார்கள்.
வழக்கமாக இந்த தீவுக்கு நிர்வாகியாக நியமிக்கப்படுபவர், மத்திய அரசின் உயர் பதவிகளில் செயலாளர் அல்லது உளவு அமைப்புகளின் தலைவர்களாக இருந்தவர்களே நியமிக்கப்படுவர். ஆனால், 2014ஆம் ஆண்டு முதல் நிர்வாகி பதவிக்கு வருபவர் அரசியல் பின்புலம் கொண்டவர்களாக உள்ளனர்.
இந்த பிரஃபுல் படேலின் அரசியல் வாழ்க்கை 2007ஆம் ஆண்டில், குஜராத்தின் ஹிமத் நகர் தொகுதியில் வென்றபோது உச்சம் பெற்றது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட இவர், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோதியுடன் நெருங்கிப் பழகினார். 2010ஆம் ஆண்டில் இவர் மாநிலத்தின் உள்துறை துணை அமைச்சராக்கப்பட்டார். ஷொராபுதின் என்கவுன்ட்டர் வழக்கில் அமித்ஷா சிறைக்கு செல்ல நேர்ந்தபோது, அவர் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை பிரஃபுல் கோடா படேலிடமே மோதி ஒப்படைத்தார்.
2012ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிரஃபுல் தோல்வி அடைந்தார். அதன் பிறகு 2014இல் நடந்த மக்களவை தேர்தலில் நரேந்திர மோதி இந்திய பிரதமரானதும் தாமன் தையு நிர்வாகியாக பிரஃபுல் கோடா நியமிக்கப்பட்டார். பிறகு தாத்ரா நகர் ஹவேலி நிர்வாகியாகவும் அவர் நியமிக்கப்பட்டார். அதுநாள்வரை அந்த யூனியன் பிரதேசங்களில் ஐஏஎஸ் உயரதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்தனர். 2020இல் தாத்ரா நகர் ஹவேலியும் தாமன் தையுவும் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு அதன் நிர்வாகி ஆன பிரஃபுல் படேலுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் லட்சத்தீவு நிர்வாகியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
PROBLEM IN LAKSHADWEEP BY BJP CENTRAL GOVERNMENT