சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது வாட்சப்பிலும், சமூக வலைதளங்களிலும் நிறைய, ‘பப்பு’ நகைச்சுவை துணுக்குகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எல்லாமே நாம் ஒரு காலத்தில் படித்த சர்தார்ஜி ஜோக்குகள்தான். ஆனால், ‘சர்தார்ஜி’ என்பதற்கு பதிலாக ’பப்பு,’ என மாற்றி ராகுல் காந்தியை கேலி செய்யும்விதமாக பாஜக இணைய அணியினால் அந்த துணுக்குகள் பரப்பப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மோடியின் இமேஜ் அவர் ஒரு சூப்பர்மேன் எனும் அளவிலும், குஜராத்தின் இமேஜ், அது ஒரு சொர்கபுரி எனும் அளவிலும் தொடர் பரப்புரை செய்யப்பட்டிருந்தது. “குஜராத் எது?” என இந்திய வரைபடத்தைக் காட்டிக் கேட்டால் காஷ்மீரைக் காட்டும் அறிவாளிகள் கூட, “குஜராத் எல்லாம் என்ன வளர்ச்சி தெரியுமா பாஸ்சு? அமெரிக்கா மாதிரி இருக்குமாம்,” என பேசும் அளவுக்கு நாடே மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தது.
சீமான் கூட பல மேடைகளில், “மோடி பெருமகன், மோடி பெருமகன்,” என அந்த காலகட்டத்தில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அப்படி ஒரு வலுவான பரப்புரை செய்யப்பட்டாலும், ராகுல் காந்தி மோடிக்கு ஒரு போட்டி ஆகிவிடக்கூடாது என்கிற பயத்தினால்தான், அதுவரை ஆட்சி அதிகாரத்தில் எந்த பதவியுமே வகிக்காத ராகுலின் இமேஜை, “பப்பு… பப்பு,” என பரப்பி காலி செய்தார்கள் பாஜககாரர்கள்.
ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தபின், யார் நிஜமாகவே ’பப்பு’ என்பது மக்களுக்கு மெள்ள மெள்ள தெரிய ஆரம்பித்தது. என்னதான் இமேஜை கட்டிக் காப்பாற்ற முயன்றாலும், நாட்டுக்கும், மக்களுக்கும் அடுக்கடுக்காக கஷ்டத்தையும், நஷ்டத்தையும் கொடுத்துக் கொண்டிருந்த மோடியின் தொடர் நடவடிக்கைகளாலும், விழித்துக்கொண்ட ராகுல் திருப்பி அடிக்க ஆரம்பித்ததாலும், இன்று அவரவரின் நிஜமான இமேஜை மக்கள் புரிந்துகொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். அதன் உச்சக்கட்ட ஒளிபரப்புதான் நாடாளுமன்றத்தில் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும், ராகுல், மோடியின் உரையும்.
ராகுல் சூப்பர் நெகட்டிவ் இமேஜில் இருந்து பாசிட்டிவ் இமேஜிற்கு வந்திருக்கிறார். இத்தனைக்கும் அவரோ, அவரது காங்கிரசோ மோடியை கேலி செய்யவில்லை, தூற்றவில்லை. இன்னொரு பக்கம் மோடியோ சூப்பர் பாசிட்டிவ் இமேஜில் இருந்து சூப்பர் நெகட்டிவ் இமேஜிற்கு வந்திருக்கிறார். தான் கனவு கண்ட புதிய இந்தியாவை கட்டும்போது அவர் அடுக்கி வைத்த ஒவ்வொரு செங்கலும் இந்திய சாமானிய மக்களின் தலையை பதம்பார்ப்பது ஒருபுறம், பொய்யும் புரட்டும், வரலாற்றுப்பிழைகளும், வெற்று அழுகைகளும் நிறைந்த அவரது மேடைப்பேச்சுக்கள் ஒருபுறம் என பார்த்துப் பார்த்து வளர்த்த அவரது இமேஜை காலி செய்யத் துவங்கி இருக்கின்றன.
நீங்கள் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுதும் எழுந்த ராகுல் ஆதரவு அலையை கவனித்திருக்கலாம். அதை ராகுல் ஆதரவு அலை என்பதைவிட, மோடியை காலி செய்ய ராகுலால்தான் முடியும் எனப் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட ஆதரவு அலை எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். காங்கிரஸ் மட்டுமல்லாது, இந்தியா முழுதும் இருக்கும் பல கட்சிக்காரர்களும், பொதுமக்களும் பாராட்டித் தீர்த்தார்கள்.
இந்தியாவில் நிலைமை இப்படி இருக்கிறதென்றால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதன் அரசியலுக்கும் இருக்கும் ஒரே பிரச்சினை திமுகவும் அதன் அரசியலும். இந்திய அளவில் ராகுல் பாஜகவுக்கு எப்படி பயத்தைக் கொடுக்கிறாரோ, அதைவிடவும் அதிகமாக தமிழகத்தில் பாஜகவுக்கு மட்டுமல்லாது, பாஜகவினால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் பல புதிய/பழைய கட்சிகளுக்கும், பிம்பங்களுக்கும் ஸ்டாலின் பயத்தைக் கொடுக்கிறார். எடப்பாடி மோடியின் கால்களில் முழுவதுமாக சரணாகதி என்பது நமக்குத் தெரியும். டிடிவி தினகரன் தனக்கு அதிமுகவிற்குள் இருப்பதாகச் சொன்ன, ’ஸ்லீப்பர் செல் எம்.பிக்கள்’ ஒரேடியாக தூங்கிவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை, சத்தமே இல்லை. அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் பங்கே பெறாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். நிலைமை இப்படி இருக்க, பாஜக மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தார்மீக ரீதியில் ஆதரிப்பதாகச் சொன்னார் ஸ்டாலின்.
நிற்க. இந்த இடத்தில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் ஏனைய இந்திய மக்களைப் போல தத்துப்பித்துக்கள் இல்லை. அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும் இங்கே நடப்பது அதிமுக ஆட்சி அல்ல, பாஜக ஆட்சி என்று. அவர்களுக்கு மிக மிக நன்றாகத் தெரியும் தாங்கள் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களும் பாஜகவின் உத்தரவின் பேரிலேயே மாநில அரசினால் செய்யப்படுகிறது என்பதும். இந்த சூழலில்தான் இந்தியாவின் ஏனைய பகுதிகளைவிடவும் தமிழகத்தில் பலமாக வீசும் பாஜக எதிர்ப்பு அலை ஸ்டாலின் ஆதரவு அலையாக மட்டும் மாறிவிடக் கூடாது என்பதில் பாஜகவும், இணையத்தில் அதோடு கைகோர்த்து ஓரணியாகச் செயல்படும் நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ராகுல் இமேஜை ஆரம்பத்தில் காலி செய்ததைப் போல எப்படியாவது ஸ்டாலின் இமேஜை காலி செய்ய பாஜகவினர் துடிக்கிறார்கள். அது அவர்களது இணைய செயல்பாடுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.
நாட்டில் அவ்வளவு பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் வரலாறு காணாத வறட்சியில் தவிக்கிறார்கள். புதிய லாவண்டர் நிற 100ரூ நோட்டை ஏ.டி.எம் மிஷின்களுக்குள் வைக்கவே பல்லாயிரம் கோடிகள் செலவாகும் என்கிறார்கள். ஆனால் இவர்களோ கடந்த மூன்று நாட்களாக #GoBackStalin #தமிழினதுரோகிதிமுக #ZeroMPdmk என பல டேகுகளில் ட்வீட் செய்துகொண்டிருந்தார்கள். இதில் கூட பாஜகவுக்கே உரிய சில நகைச்சுவைகளை நாம் காணலாம்.
மோடி டில்லியில் இருந்து தமிழகம் வந்தார். அதனால், “எங்களுக்கு காவிரியில் அநீதி இழைத்த நீங்கள் உங்கள் ஊருக்கே திரும்பிப் போங்கள். எங்கள் ஊருக்கு வராதீர்கள்,” என்ற அர்த்தத்தில் திமுக ஆரம்பித்த #GoBackModi டேகில் பின்னர் தமிழக பொதுமக்களும் இணைந்துகொண்டு அதை சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆக்கினார்கள். அதில் லாஜிக் இருந்தது. ஆனால் ஸ்டாலின் லண்டனில் இருந்து தன் சொந்த ஊருக்கு வருகிறார். அவருக்கு எதற்காக Goback சொன்னார்கள் என பாஜககாரர்களுக்கும் தெரியாது, அதற்கு துணை நின்றவர்களுக்கும் தெரியாது.
அதையும் சிலமணி நேரங்களில் திமுகவினரின் #WelcomeStalin டேக் ஓவர்டேக் செய்தது தனிக்கதை. (இதில் திமுக அல்லாத பல கட்சிக்காரர்களும் கூட கலந்துகொண்டதுதான் தமிழகத்தின் பாஜக எதிர்ப்பு நிலையை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது) அடுத்தது #ZeroMPDmk எனும் ஹேஷ்டேக். திமுகவுக்கு லோக்சபாவில்தான் எம்பிக்கள் இல்லை. ராஜ்யசபாவில் உள்ளார்கள். இதுகூட தெரியாமல் பாஜககாரர்கள் ஒரு ஹேஷ்டேக் ஆரம்பிக்கிறார்கள்! இதெல்லாவற்றையும் விட திமுக எம்பி திருச்சி சிவா ராஜ்யசபாவில் எழுப்பிய கோரிக்கையின் பலனாக பெண்கள் பயன்படுத்தும் நாப்கினுக்கு GST வரிவிலக்கு கிடைத்திருக்கும் இன்றைய தினத்தில் திமுகவை திட்டி ஒரு ஹேஷ்டேக் ஆரம்பிக்கிறார்கள்!! இதெல்லாம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பாஜகவின் இணைய அணி இருப்பதையே காட்டுகிறது.
பாராளுமன்றத்தில் மோடியின் உடல்மொழியை பார்த்தவர்கள் அதில் இருந்த அதீத பதட்டத்தையும், இயலாமையின் வெளிப்பாடையும் கவனித்திருக்கலாம். ராகுலை கிண்டல் செய்கிறேன் என்கிற பெயரில் தனது உரையின் போது நடன மங்கையை போல விரல்களை வைத்துக்கொண்டு அவர் செய்த சேஷ்டைகள் நிதானமிழப்பின் உச்சகட்டம், பதட்டத்தில் ஆடிய பரதநாட்டியம்! பொய்களையும், வரலாற்றுத் திரிபுகளையும், நியூஜெர்சியை குஜராத்தின் குக்கிராமம் எனக் காட்டும் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட இமேஜ்களையும் ஆர அமர இணையத்தில் பரப்பும் பாஜக இணைய அணியும், மோடியைப் போலவே பதட்டத்தில் நிதானமிழந்திருப்பதைதான் அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகிறது. மொத்தத்தில் ராகுலும், ஸ்டாலினும் மாறிமாறி டிவிட்டரில் மரியாதையைப் பரிமாறிக்கொண்டதும், அதன்பின் நடந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு ஸ்டாலின் தார்மீக ஆதரவளித்ததும், ராகுல் எல்லா பந்துகளிலும் சிக்சராக அடித்ததும் பாஜகவை கதிகலங்கச் செய்துள்ளது என்பது மட்டும் உறுதி.