கடந்த அக்டோபர் 11 அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல் துறையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு நடந்திருக்கும் முதலாவது மோதல் சாவு இது. மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் செயல்பாட்டு அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் கள ஆய்வில், இது போலி மோதல் சாவு என்று கூறப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் பின்பு மோதல் சாவில் இறந்ததாகச் சொல்லப்படுவதில் உள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டியிருக்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் அறிக்கையானது, முதல்வர் இந்த மோதல் சாவு குறித்த விசாரணையை மாநில மனித உரிமை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களுக்குள், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரும் காவல் துறையினருடனான மோதலில் சுடப்பட்டு இறந்துள்ளார். கொலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவரின் மீது பதிவாகியுள்ளன. கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டுவந்தவர் தலைமறைவாக இருந்ததை அறிந்து, அவரைப் பிடிப்பதற்காகத் தனிப்படை விரைந்துள்ளது. காவல் துறையினரிடமிருந்து தப்புவதற்காக அவர்களைத் தாக்கியதால் தற்காப்புக்குச் சுட வேண்டியதாகிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டவர் வடமாநிலத்தவர். அவரிடம் துப்பாக்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பெண்ணிடமிருந்து சங்கிலி பறித்த சம்பவத்தை அடுத்து அவரைத் தேடவும் கைதுசெய்யவும் காவல் துறை முயன்றபோது கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடி மோதல் சாவில் கொல்லப்பட்டவர் குற்ற நடத்தையர். கொடுங்குற்றங்களைச் செய்வதையே தங்களது இயல்பாகக் கொண்டிருப்பவர்கள் மீது பொதுமக்களிடம் எழுகின்ற அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தகைய மோதல் சாவுகள் ஒரு தீர்வாக முன்மொழியப்படுகின்றன. ஆனால், இத்தகைய மோதல் சாவுகள் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமின்றி, மனித உரிமைப் பிரச்சினையும்கூட. குற்றங்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதே காவல் துறையின் பொறுப்பே அன்றி, தண்டனை தருகிற அதிகாரத்தைத் தானே ஏற்றுக்கொள்வது அல்ல.
இந்துத்துவ எதிர்ப்பு, மதச்சார்பின்மை நிலைப்பாடு ஆகியவற்றுக்காக திமுகவை ஆதரித்துவரும் மனித உரிமை ஆர்வலர்களும்கூட மோதல் சாவுகள் விஷயத்தில் தற்போது திமுகவுடன் முரண்பட்டு நிற்கின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்கூட மோதல் சாவுகள் கூடாது என்ற தனது கருத்தை அழுத்தமாகத் தெரிவித்துள்ளது. இன்னொரு மோதல் சாவு ஏற்படாது என்ற உறுதியை முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. குற்ற நடத்தையர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியதற்காகக் கடந்த சில வாரங்களில் தமிழ்நாடு காவல் துறை பாராட்டப்பட்டது. ஆனால், இப்போது அதன் எல்லை மீறல்கள் கண்டிக்கப்படுகின்றன. எந்தவொரு குற்றச் செயலும் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு சட்டரீதியாகவே தண்டிக்கப்பட வேண்டும்.
Should be legally punished