கும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம். ‘‘பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைக் கும்பல்கள் சட்டத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொள்வதை மத்திய – மாநில அரசுகள் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது’’ என்று உச்ச நீதிமன்றம் முன்னர் கண்டித்தது. மாவட்டம்தோறும் ஒரு அதிகாரி இந்தப் படுகொலைகளைத் தடுக்க நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது. அதற்குப் பிறகு, பசு குண்டர்களின் அராஜகத் தாக்குதல்கள் குறைந்தன. இப்போதோ, ‘குழந்தைகளைக் கடத்துகிறவர்கள்’ என்ற சந்தேகத்தின்பேரில் அப்பாவிகளைக் கொல்வது அதிகமாகிவருகிறது.
குழந்தைகளைக் கடத்துகிறவர்கள் குறித்து மக்களிடையே பரவும் வீடியோ காட்சிகளும் குறுஞ்செய்திகளும்தான் கும்பல் கொலைகளுக்கு முக்கியக் காரணம் என்று அரசும் காவல் துறையும் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட முடியாது. சமூகத்தில் கும்பல்கள் பெற்றுவரும் ஊக்கத்தையும் நாம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பசு குண்டர்களின் அராஜகங்களுக்கும் கும்பல் கொலைகளுக்கும் தொடர்பு உள்ளது. ‘‘நடப்பு சமூக-பொருளாதாரக் கட்டமைப்பும் சகிப்புத்தன்மையற்ற போக்கும் மத அடிப்படையில் அணிதிரள்வதும் காரணங்கள்’’ என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய 45 பக்க உத்தரவில் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. சகிப்புத்தன்மை இல்லாததால் உருவாகும் வெறுப்புணர்வுக் குற்றங்கள், சித்தாந்த ஆதிக்க உணர்வு, பாரபட்சமான அணுகுமுறை ஆகியவற்றை வளரவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறது. “இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும், நடந்தால் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ள உச்ச நீதிமன்ற அமர்வு, “கும்பல்கள் சேர்ந்து அப்பாவிகளை அடித்துக் கொல்வதைத் தனிக் குற்றமாகவே இனி கருத வேண்டும்” என்று கூறியிருக்கிறது. இதற்கென்று தனிச் சட்டம் இயற்றினால்தான் இதில் ஈடுபடுவோருக்கு அச்சம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.