வழக்கம்போல உறுதியான ஒரு தீர்ப்பை 2021 சட்டமன்றத் தேர்தலிலும் வழங்கியிருக்கிறார்கள் தமிழக மக்கள். திமுகவுக்குத் தனிப் பெரும்பான்மையையும், அக்கூட்டணிக்கு உறுதியான அறுதிப் பெரும்பான்மையையும் வழங்கியிருப்பதன் மூலம், ஒரு சவாலான காலகட்டத்தில் நிலையான ஆட்சி அமைந்திடும் சூழலை இந்தத் தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது; அதேசமயம், சென்ற முறையைப் போலவே சட்டமன்றத்தில் காத்திரமான அளவில் எதிர்க்கட்சிகள் செயல்படுவதற்கான வாய்ப்பையும் இந்தத் தீர்ப்பு உத்தரவாதப்படுத்துகிறது.
ஐந்து முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலிலும் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இரு திராவிடக் கட்சிகளுமே பெரிய அளவில் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. இரு பெரும் தலைவர்களாக விளங்கிய மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா இருவரின் மறைவுக்குப் பிறகும் நடந்திருக்கும் முதல் சட்டமன்றப் பொதுத்தேர்தலான இது ஒருவகையில் திமுக, அதிமுக இரு கட்சிகளிலுமே தலைமையை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாத நிலையிலும், திமுகவைத் துடிப்பான எதிர்க்கட்சியாக வழிநடத்தியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஒன்றியத்தையும் மாநிலத்தையும் ஆளும் பாஜக – அதிமுக இரு கட்சிகளும் இணைந்த பலம் மிக்க கூட்டணியைத் திமுக வீழ்த்தியிருப்பதன் பின்னணியில் ஸ்டாலினின் கடுமையான உழைப்பு இருக்கிறது. அதேபோல, பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்ததால் உருவான அதிருப்தியோடு, ஒன்றியத்தில் ஆளும் பாஜகவுடனான கூட்டணியின் விளைவாக உருவான அதிருப்தி உணர்வையும் சேர்த்து அதிமுக சமாளிக்க வேண்டியிருந்தது. கட்சிக்குள் ஓ.பன்னீர்செல்வத்துடனான நிழல் யுத்தம், கட்சிக்கு வெளியே தினகரன் நடத்திவந்த நேரடி யுத்தம் இரண்டின் மத்தியிலேயே தேர்தலை எதிர்கொண்டார் முதல்வர் பழனிசாமி. 2019 மக்களவைத் தேர்தல் படுதோல்வியிலிருந்து வேகமாகச் சுதாரிக்கலான அவர், எல்லா வியூகங்களையும் பயன்படுத்தினார். உள்ளபடி தோல்வியின் தீவிரத்தைக் குறைக்க அவருடைய உழைப்பு வெகுவாகப் பயன்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆட்சியைப் பறிகொடுத்தாலும், தேர்தலில் கணிசமான தொகுதிகளில் அதிமுகவை வெல்ல வைத்ததன் மூலம் கட்சியை உத்தரவாதப்படுத்திக்கொண்டிருக்கிறார் பழனிசாமி என்று சொல்லலாம்.
இரு திராவிடக் கட்சிகளின் கூட்டணிக்கும் தங்கள் தீர்ப்பின் வழி ஒரே செய்தியைத்தான் சொல்லியிருக்கிறார்கள் தமிழக மக்கள்; ‘தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள்’ என்பதே அந்தச் செய்தி. மாநிலத்தின் ஆட்சியில் பழனிசாமி நிர்வாகத்தின் மீது இருந்த அதிருப்தியைக் காட்டிலும் மாநிலத்தின் உரிமைகளை அவருடைய அரசு நிறைய விட்டுக்கொடுத்தது என்பதே தமிழக மக்களிடம் வெளிப்பட்ட பெரும் அதிருப்தி ஆகும். திமுக சரியாக அதைச் சுட்டியது. ஸ்டாலின் இந்தத் தேர்தலின் பிரகடனமாகவே அதை மாற்றினார். ‘தமிழகத்தின் சுயமரியாதையை மீட்டெடுப்பதற்கான போர்’ என்று இத்தேர்தலை அவர் வரையறுத்தார்; கூட்டாட்சிக்கான உறுதியான குரலாக திமுக செயல்படும் என்று அவர் உறுதியளித்தார். தன்னுடைய வார்த்தைகளில் அவர் நிற்க வேண்டும். ஒன்றிய அரசுடன் சுமுகமான ஓர் உறவைப் பராமரிக்கும் அதேசமயம், தமிழக மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு நல்லாட்சியைத் திமுக வழி அவர் வழங்கிட வேண்டும். அதிமுக தன்னுடைய தவறுகளிலிருந்து மீண்ட ஆக்கபூர்வமான ஓர் எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும். மக்களின் இந்த எண்ணத்தை இரு கட்சிகளும் நிறைவேற்றும் என்று நம்புவோம்.
STALIN CM TAMILNADU