காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கம்! இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!!
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உறுதி செய்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு காஷ்மீர் என்ற மாகாணம் எந்த நாட்டுடனும் சேராமல் இருந்தது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த காஷ்மீர் மாகாணத்தை மஹாராஜா ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார்.
காஷ்மீர் மாகாணம் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதை அந்த மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்ற உரிமை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் காஷ்மீரை அபகரிக்க பாகிஸ்தான் முயன்ற போது இந்தியாவிடம் பாதுகாப்புக் கோரிய மஹாராஜா ஹரிசிங், அதற்காக பல நிபந்தனைகளை விதித்தார்.
அதேபோல் ஜம்மு காஷ்மீரில் அந்த மாநில மக்களால் மட்டுமே அசையா சொத்துகளை வாங்க முடியும். வெளிமாநிலத்தவர் எவருக்கும் எந்த நில உரிமையும் கிடையாது. 10 ஆண்டுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்தவர்களுக்குச் சொத்து வாங்கும் உரிமை உண்டு. வெளி மாநிலத்தவர்களால் காஷ்மீரில் அரசு வேலை, அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களைப் பெற முடியாது. ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதையும், அவர்களுக்கு அளிக்கவேண்டிய உரிமையைத் தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுக்கே உள்ளது.சமத்துவ, சம உரிமை பாதிக்காத வகையில் காஷ்மீர் மாநில அரசு அதன் சட்டப்பேரவையில் எந்த சட்டத்தையும் இயற்றிக்கொள்ளலாம் என்ற அதிகாரத்தைத் தரும் சட்டம் 35ஏவையும் நீக்கி உத்தரவிட்டுள்ளதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அவரது நிபந்தனைகளின் அடிப்படையில்தான் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்து காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை இழக்கும் வேலையை மத்திய அரசு தற்போது செய்துள்ளது.
இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜம்மு காஷ்மீரில் ஒரு சதுர அடி சொத்து கூட வாங்க முடியாத நிலை நீடிக்கிறது. அதற்குக் காரணமான அரசியல் சாசன சட்டம் 370 மற்றும் 35ஏ சட்டங்களை நீக்குவதன் மூலம், ஜம்மு காஷ்மீரைக் கொத்து கொத்தாகப் பலி கொடுத்து கார்ப்பேரட் முதலாளிகளுக்கு விருந்து வைக்கவும், காஷ்மீரில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களை நிர்கதியாக்கியாக்கவே இந்த சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியுள்ளது.
காஷ்மீரத்து மக்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் அந்த மக்களுக்கு ஆதரவையும் சலுகைகளையும் வழங்கி அவர்களிடம் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் மனப்பூர்வமான சம்மதத்துடன் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டிய முயற்சிகளை விடுத்து காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளைக் குவித்து அவர்களை மிரட்டி அவர்களுக்குள்ள உரிமைகளை ரத்து செய்தால் அந்த மக்கள் எப்படி இனங்கி வருவார்கள்?
பொதுவாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்களின் எண்ணத்தைக் கேட்க வேண்டும் என்ற வழக்கு ஐநாவில் உள்ளது! அதற்கு மாற்றமாக அமைந்துள்ளது மத்திய அரசின் இந்த செயல்பாடு.
அதுமட்டுமின்றி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்ற கருத்தில் உள்ள கோடிக்கணக்கான காஷ்மீர் மக்கள் இந்திய அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மத்திய அரசின் இந்த செயல் நீர்த்துப் போகச்செய்துள்ளது.
இந்த 370 சட்டப் பிரிவு விலக்கிக்கொள்ளப்படும் என்ற அறிவிப்பின் போது காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களாக உமர் அப்துல்லா மற்றும் மஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் அடைத்து அவர்களை வெளியில் செல்ல அனுமதி அளிக்காமல் உள்ளது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
காஷ்மீரில் திடீர் பரபரப்பையும் பதட்டத்தை ஏற்படுத்தி நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே பாஜக அரசின் இந்த செயல்பாடு அமைந்துள்ளது.
மறைந்த பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் காஷ்மீர் மக்களுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் நமது அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை நீக்கும் மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்ட இந்த நாள் “நமது நாட்டின் ஜனநாயகத்தின் கருப்பு நாளாகும்.”
ஜனநாயக விழுமியங்கள் நிறைந்த நமது நாட்டில் -ஜனநாயகத்தைப் படுகுழியில் வீழ்த்தும் மோடி அரசின் இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிராக வீறுகொண்டு எழுந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து களம் காண வேண்டும்.