பணியிடங்களில் இளைய தலைமுறையினரும், பழைய தலைமுறையினரும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். நிறுவனங்களின் மேலாளர்கள் இந்த இரண்டு உலகங்களையும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இன்று பழைய தலைமுறையை ஜென் எக்ஸ்(Gen X) என்கிறார்கள். இளைய தலைமுறை ஜென் ஒய் (GenY) எனப்படுகின்றனர். அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் ஒரே பணியைச் செய்யும்போது, முரண்பாடுகள் உருவாகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஒரு நிறுவனத்தைச் சீராக நடத்துவதற்கு இந்த இரண்டு தலைமுறைகளையும் புரிந்துகொள்ள நேர்மையான முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம்.
ஒரு இளைய தலைமுறை ஊழியர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத, அமைதியில்லாத இறக்கைகள் கொண்டவராக நம் மனதில் பதிந்திருக்கிறார். ஆனால், பழைய தலைமுறை ஊழியர் தன்னிறைவான இறக்கைகளுடன் இடம்பெயர்வில் ஆர்வமில்லாதவராக இருக்கிறார்.
இளைய தலைமுறை எப்போதும் குறுகிய காலத்துக்கே திட்டமிடும் என்று சொல்கிறார் ரெனால்ட் நிசான் டெக்னாலஜி அண்ட் பிஸ்நெஸ் சென்டரின் மனிதவளத் துறையின் துணைத் தலைவர் ஆரோக்கிய சகாயராஜ்.
ஒரு பழைய தலைமுறை ஊழியர், தான் அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் எங்கே இருப்பேன் என்று கேட்பார். ஆனால், ஒரு புதிய தலைமுறை ஊழியர், தான் அடுத்த ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் எங்கே இருப்பேன் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுவார். பணிபுரியும் நிறுவனத்தைவிட்டுப் பாதிக்கு மேற்பட்ட ஊழியர்கள் , மூன்று ஆண்டுகளில் சென்றுவிடுகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. இதைப் பார்க்கும்போது ஒரு ஊழியரின் ஐந்து ஆண்டு திட்டம் என்பது அதீதமாகத் தெரிகிறது” என்கிறார் அவர்.
தொலைக்காட்சி ரிமோட்டை கண்ட்ரோலை ஆய்வு செய்தால் இந்த இரண்டு தலைமுறைகளுக்கு இருக்கும் வித்தியாசமான மனப்பாங்கைத் தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில் பழைய தலைமுறையினர் எதிர்பார்ப்பு, காத்திருப்பு, திருப்தி போன்ற அம்சங்கள் நிறைந்திருக்கும் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்தது.
ஒரு இந்திப் படத்தைப் பார்ப்பதற்கு அவர்கள் சனிக்கிழமைக்காகக் காத்திருந்தார்கள். பிராந்திய மொழியில் படம் பார்ப்பதற்கு ஞாயிறு வரை காத்திருந்தார்கள். அப்போதிருந்த புகழ்பெற்ற நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் வெற்றியடைந்த நிகழ்ச்சிகளைப் பட்டியலிட மெனக்கெட வேண்டிய தேவையிருக்கும்.
இந்தக் காலகட்டத்தில்தான் சேனல்களின் கூட்டம் ரிமோட் கண்ட்ரோலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றது. இந்தியாவின் பொருளாதார, கலாச்சார எல்லைகள் மறைந்துகொண்டிருந்த உலகமயமாக்கல் காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் வளர்ந்தனர். அவர்கள் பல மொழிகளில் இருக்கும் வாய்ப்புகளை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்கின்றனர்.
ஏன் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று தெரிந்துகொள்ள புதிய தலைமுறை ஊழியர்கள் விரும்புவார்கள். எந்தக் கேள்வியும் கேட்காமல் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் பழைய தலைமுறை ஊழியர்கள் கவனமாக இருப்பார்கள்.
ஒரு புதிய தலைமுறை ஊழியர் ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படுவதற்கான காரணத்தைத் தேடுவார். வெளிப்படைத்தன்மை இருக்கும் நிறுவனங்களால்தான் ‘ஜென் ஒய்’ ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். ஒரு ‘புதிய தலைமுறை ஊழியர் தகவல் கேட்கும்போது பழைய தலைமுறை ஊழியர் ஒருவித பயமுறுத்தலை உணரலாம். ஆனால், புதிய ஊழியரின் நோக்கம் பயமுறுத்துவது கிடையாது. விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் இருக்கும் நியாயமான ஆர்வம்தான் அவர்களைக் கேள்வி கேட்க வைக்கிறது” என்கிறார் சகாயராஜ்.
தகவல் பரிமாற்றம் வேகமாகவும், அதிநவீனமாகவும், முறைசாராததாகவும் மாறியிருந்த காலத்தில் இந்தியாவில் புதிய தலைமுறையினர் பிறந்தனர். இணையத்தின் உதவியோடு எந்தப் பொருளைப் பற்றிய தகவல்களையும் பதினேழு வயதிலேயே தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்தக் காலத்து இளைஞர்கள் அனைவரும் விஷயமறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் சகாயராஜ். ஒரு துறையில் இறங்குவதற்கு முன்னால் அதன் சாதக, பாதகங்களைத் தங்கள் முந்தைய தலைமுறையினரைவிட இவர்கள் நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
‘புதிய தலைமுறையினர் ‘தனக்கான தனிப்பட்ட நேரத்தை’ சமரசம் செய்து கொள்ள விரும்புவதில்லை. ஆனால், ‘பழைய தலைமுறையினருக்கு தங்களுடைய தனிப்பட்ட நேரத்தை வேலை எடுத்துக் கொள்வதில் ஆட்சேபம் இருப்பதில்லை.
“ ஒரு ‘பழைய தலைமுறை ஊழியர் சில சமயங்களில் 15 மணி நேரம் வேலைபார்த்தாலும் சின்ன சத்தம்கூடப் போடாமல் இருப்பார். அதற்கு மாறாக, வேலை சுதந்திரம், நண்பர்கள், குடும்பம், பிற ஆர்வங்களுக்குப் போதுமான நேரம் ஒதுக்கப் போதுமான நேரத்தை புதிய ஊழியர் எதிர்பார்க்கிறார்” என்கிறார் சகாயராஜ்.
இது மறுபடியும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதைத்தான் காட்டுகிறது. ‘புதியவர் ’ தனிப்பட்ட வளர்ச்சிக்கும், துறைசார்ந்த வளர்ச்சிக்கும் நிறைய வழிகள் இருக்கும் உலகத்தில் பிறந்திருக்கிறார். அதனால், இயல்பாகவே அவருக்குச் செய்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
தமிழில்: என். கௌரி
-தி இந்து